Main Menu

நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை பிரான்ஸ்- சுவீடன் உறுதிசெய்துள்ளன: ஜேர்மனி

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் உறுதிசெய்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜேர்மனி இராணுவ பரிசோதனை கூடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, ரஷ்ய இராணுவம் இரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக தெரியவந்ததாக ஜேர்மனி கூறியது.

அத்துடன் விஷம் செலுத்தப்பட்டதால் அவருடைய ஆரோக்கியம் பலநாட்களுக்கு பாதிக்கப்படக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இது குறித்து, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும், பரிசோதனை மேற்கொண்டன. இந்த ஆய்விலும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜேர்மனி அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சைபர்ட் கூறுகையில் ‘அலெக்சியின் உடலில் நோவிசோக் நச்சுப்பொருள் கலந்ததை, ஜேர்மனியை தொடர்ந்து பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளின் ஆய்வகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இதுபற்றி ரஷ்யா முறையான விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எங்களது ஐரோப்பியா நட்பு நாடுகளுடன் நெருக்கமான ஆலோசனையில் இருக்கிறோம்’ எனக் கூறினார்.

ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் இருவரும் ஜேர்மனி, மற்றும் பிரான்ஸ் நாட்டு குற்றச்சாட்டுகளையும் பரிசோதனை முடிவுகளையும் மறுத்து வருகின்றனர்.

பகிரவும்...