Main Menu

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய யுக்தி: போஸ்டர் பிரசாரத்தில் கமல்ஹாசன் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர்கள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. ஒரு அணியாகவும் அ.தி.மு.க. இன்னொரு அணியாகவும் களம் இறங்க காத்திருக்கின்றன. இவர்களுடன் தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தனியாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க புதிய யுக்திகளுடன் களம் இறங்கியுள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்கிற கோ‌ஷத்துடன் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நாளில் இருந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அச்சிடும் அனைத்து போஸ்டர்களிலும் சீரமைப்போம் தமிழகத்தை என்கிற வாசகம் பெரும் பாலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.

அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர்கள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் யார் உங்கள் வேட்பாளர் என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில் கமல் ஹாசன் கையில் டார்ச்சுடன் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை கமல் ஹாசன் தொடங்கி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த போஸ்டர் தேர்தலுக்காக ஒட்டப்பட்டுள்ள முதல் போஸ்டர் என்றும் அடுத்தடுத்த போஸ்டர்கள் தயாராகி வருவதாகவும் அந்த கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

யார் உங்கள் வேட்பாளர் என்று கேள்வி எழுப்பி தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வரிசையில் உங்கள் கவுன்சிலர் யார்? என்கிற போஸ்டரும் விரைவில் ஒட்டப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து உங்கள் கவுன்சிலர் நேர்மையானவரா? உங்களுக்கானவரா? சுய நலமிக்கவாரா? என்பது போன்ற கவர்ந்து இழுக்கும் விழிப்புணர்வு வாசகங்களுடன் அடுத்தடுத்த போஸ்டர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தயாரித்து வருகிறார்கள். இந்த போஸ்டர்களும் சென்னை மாநகர பகுதி களில் ஒட்டப்பட உள்ளன.

இதன் மூலம் வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நிச்சயம் மாற்றத்திற்கான விதையை விதைப் போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...