Main Menu

தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக இராமதாஸ் குற்றச்சாட்டு!

ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் இராமதாஸ்  இதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  வெளியிட்ட அறிக்கையில் மேற்படி கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  “தெற்கு ரயில்வே துறையில்  பதவி உயர்வு அடிப்படையில் சரக்கு ரயில் கார்டு  பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில் முழுவதுமாக வட இந்திய பணியாளர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இத்தேர்வுகளில் தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு,  கேரளா,  ஆந்திராவின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே துறையில் 96 சரக்கு ரயில் கார்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. அதிக அனுபவம் தேவைப்படும் இந்தப் பணிகளுக்கு நேரடியாக ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை.

ரயில்வே துறையில் பாய்ண்ட்ஸ் மேன்,  ஷண்டிங் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பணிகளில் உள்ள பட்டதாரிகளுக்கு துறை சார்ந்த போட்டித்தேர்வு நடத்தப்பட்டு  அதில் தகுதியானவர்கள் இந்தப் பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 96 பணிகளுக்கு தமிழகத்திலிருந்து 3000-க்கும் கூடுதலானவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில்  அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் வட இந்தியர்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஆன்லைன் முறைக்குத் தேர்வு மாற்றப்பட்டவுடன் வட இந்திய பணியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகள் நிகழ்த்தப்படுகின்றன.  அதனால் தான் தமிழகத்தைச் சேர்ந்த பணியாளர்களால் சரக்கு ரயில் கார்டு பணிக்கான துறைத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...