Main Menu

தெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்!

யேமனில் பலநாட்களாக இடம்பெற்றுவரும் தொடர் தாக்குதல் சம்பவங்களை அடுத்து போர் நிறுத்தத்திற்கு தெற்கு பிரிவினைவாதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைமுறைக்கு வரவிருந்த போர் நிறுத்தத்திற்கு பிரிவினைவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்திற்கு ஆதரவான படைகளுடன் பல நாட்கள் இடம்பெற்ற மோதலின் பின்னர் யேமன் பிரிவினைவாதிகள் துறைமுக நகரமான ஏடனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஆதரவுடைய தெற்கு இடைக்கால சபையுடன் இணைந்த படைகள் ஒரு சுயாதீனமான இராஜ்ஜியத்தை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அதன்படி இராணுவ முகாம்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையினை தெற்கு பிரிவினைவாதிகள், அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது ஒரு “சதி” என யேமன் அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடிய சவுதி தலைமையிலான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது.

இருப்பினும் தற்போது குறித்த கூட்டணி உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், அதை மீறுபவருக்கு எதிராக இராணுவ சக்தியைப் பயன்படுத்தும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கு பிரிவினைவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...