Main Menu

தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா

சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‘தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் சக்திகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக தாய்வானை அமெரிக்கா ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்வான் தொடர்பான அமெரிக்காவின் செயல்களுக்காக, அந்த நாடு தாங்க முடியாத விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை’ என கூறினார்.

சீனாவில் கடந்த 1949இல் நடந்த உள்நாட்டுப்போருக்கு பிறகு தாய்வான் தனிநாடாக உருவானது. ஆனாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசாங்கம் கூறி வருகிறது

எனினும் தாய்வான், சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜனநாயக முறையிலான அரசாங்கம் தான் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

ஆனால், தேவை ஏற்பட்டால் சீனக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டியும் வருகிறது.

இந்த சூழலில் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா- தாய்வான் இடையிலான இராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தாய்வான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...