Main Menu

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை : பொலிஸ் தலைமையகம்

மட்டக்களப்பு- கள்ளியன்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சீயோன் தேவாலையத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை தாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்தது.

இன்று மட்டகளப்பு நீதிவான்,  சட்டவைத்தியர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை தாரியின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் , அவை தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 21 தாக்குதல்களின் போது மட்டகளப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த , தற்கொலை தாரியான மொஹமட் நசார் மொஹமட் அசாரின் தலை மற்றும் உடற்பாகங்கள் கடந்த மாதம் 26 ஆம் திகதி கள்ளியன்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேசவாசிகளால் பாரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலே, இந்த உடற்பாகங்கள் இவ்வாறு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட உடற்பாகங்களை மட்டகளப்பு மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கு அமைய , வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. 

அதேவேளை தற்கொலை தாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டகளப்பில் ஹர்தால் ஒன்றையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர் குறித்த உடற்பாகங்களை தோண்டி எடுக்க மட்டகளப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹர்தால் கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...