Main Menu

சஜித்திற்கு பதவி ஆசை வந்துவிட்டது – சரத் பொன்சேகா

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சித்தார்.

கொழும்பில், நேற்று (புதன்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. சிலர் தற்போது, தங்களைத் தாங்களே வேட்பாளராக அறிவித்துக்கொண்டுள்ளார்கள்.

எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சிக்குள் எந்தவொரு பிளவும் ஏற்படவில்லை என்பதையும் கூறிக்கொள்ளவேண்டும்.

வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம். அமைச்சர் சஜித் பிரேமதாச தற்போது மக்களுக்கு தொடர்ச்சியாக சேவை செய்துவருவதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இவ்வாறான சேவைகளை அவர் கடந்த காலங்களில் மேற்கொள்ளவில்லை. எனவே, வாய் வார்த்தைகளால் அவர் கூறுவதை நம்பும் அளவுக்கு நாம் முட்டாள்கள் அல்ல.

நான் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கட்சித் தலைவருக்குக் கட்டுப்பட்டே செயற்பட்டு வருகிறேன்.

எனவே, 5ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினரால் குருநாகலில் நடத்தப்படும், மாநாட்டுக்கு நான் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன்.

இந்த மாநாட்டை நடத்த வேண்டாம் என்று கட்சித் தலைவரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது நடைபெறுமாக இருந்தால் அதனை நிச்சயமாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்மையில், தற்போது கட்சித் தலைவர் கூறுவதை உபதலைவர் கேட்பதில்லை.  அமைச்சர் சஜித் பிரேமதாசதான் வேட்பாளர் என்று இன்னும் கட்சித் தீர்மானிக்காத நிலையில்தான் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கெல்லாம் பதவி ஆசையே காரணமாக இருக்கிறது” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...