Main Menu

தடை கடந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஸ்மித்!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் ஆகியன நிறைவடைந்துள்ள நிலையில், ஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்…

இந்த பட்டியலில், கடுமையான போராட்டத்திற்கு பிறகு அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித், இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் வரை முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.

பின்னர், தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியில், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தினால், தடை காரணமாக கடந்த ஒரு வருடம் சர்வதேச போட்டிகளில் விளையாடமல் இருந்தார். எனினும், இந்த ஒருவருட காலத்திலும் ஸ்டீவ் ஸ்மித், முதல் பத்து இடங்களில் இருந்தார்.

இந்த காலகட்டத்தில் இந்தியக் கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, முதலிடத்திற்கு முன்னேறினார்.

அண்மையில் ஆரம்பமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், தனது மீள்வருகை நிரூபித்த ஸ்மித், முதல் டெஸ்டில் 144, 142 ஓட்டங்கள், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 92 ஓட்டங்கள் என மொத்தமாக 378 ஓட்டங்களைக் குவிக்க 913 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாமிடத்திற்கு முன்னேறினார்.

அப்போது, முதலிடத்தில் இருந்த கோஹ்லியை விட ஸ்மித் 9 புள்ளிகளே பின்தங்கியிருந்தார். எனினும், லோர்ட்ஸ் டெஸ்டில் உபாதைக்கு உள்ளான ஸ்டீவ் ஸ்மித், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்தாலும், விராட் கோஹ்லி இத்தொடரில் பெரிதாக பிரகாசிக்கவில்லை.

இதனால், விராட் கோஹ்லியை பின்தள்ளி, ஸ்டீவ் ஸ்மித், 904 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோஹ்லி 903 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன், 878 புள்ளிகளுடன் தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவின் புஜாரா 31 புள்ளிகள் குறைந்து 825 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும். நியூஸிலாந்தின் ஹென்ரி நிக்கோல்ஸ் 749 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், நீடிக்கின்றனர்.

ஏழாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட், ஒரு இடம் ஏற்றம் கண்டு 726 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் 81 ஓட்டங்கள் மற்றும் 102 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகன் வென்றவரும், இரண்டாவது டெஸ்டில் 24 ஓட்டங்கள் மற்றும் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் குவித்த இந்தியாவின் அஜிங்கியா ரஹானே, நான்கு இடங்கள் ஏற்றம் கண்டு ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் டொம் லதம், 724 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 10 புள்ளிகள் குறைந்து, மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டு 723 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்க வீரரான எய்டன் மார்கிரம், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 719 புள்ளிகளுடனும், பத்தாவது இடத்தில் உள்ளார்.

பகிரவும்...