Main Menu

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இணக்கமில்லை

நாடாளுமன்ற தேர்தல் ஆசனப்பங்கீடு குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்திலும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கூட்டத்தை போலவே இம்முறையும் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்ட நிலையில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி மிக அதிகமான ஆசனங்களை எதிர்பார்ப்பதால் இன்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீண்டும் கொழும்பில் அடுத்த வாரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சந்திப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஆரம்பம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

கடந்த 17ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டம் இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளுக்கான ஆசன பங்கீடுகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்வதற்காக குறித்து கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...