Main Menu

தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் – பி.மாணிக்கவாசகம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, உதயசூரியன் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று புதிய அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே இந்த அணி உருவாக்கப்படுகின்றது என அறிவித்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் தேர்தலில் அளித்துள்ள ஆணையை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக் கட்சி புறந்தள்ளிச் செயற்படுவதாகக் கூறியே, கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து அந்தக் கட்சி வெளியேறியது.

அவ்வாறு வெளியேறிய அந்தக்கட்சி, தமிழ் மக்களின் தேர்தல் ஆணையை நிறைவேற்றுவதிலும், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டியதே அவசியம். அவ்வாறு தமிழ் மக்களுடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒத்த கொள்கைகளையும் அதனோடு இணைந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்கத்தக்க அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்வதே பொருத்தமானதாக இருக்கும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குமே இப்போது வலுவானதோர் அரசியல் அணி அவசியமாகியிருக்கின்றது. செயல் வல்லமையுடையதோர் அரசியல் தலைமை இல்லை என்பதே தமிழ் மக்களுடைய அரசியல் ரீதியான ஏக்கமாகும்.

மனக்கசப்புடனான மக்கள் போராட்டங்கள்

விடுதலைப்புலிகளின் மறைவுக்குப் பின்னர், அத்தகைய அரசியல் தலைமைக்கான தேவை எழுந்திருந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் பெரும்பான்iயாக அணி திரண்டிருந்தார்கள், ஆனால், அந்த நம்பிக்கை விழலுக்கு இறைத்த நீராகியிருப்பதையே இன்றைய தமிழ்த் தரப்பு அரசியலின் கள நிலைமை வெளிப்படுத்தியிருக்கின்றது.

தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தமது அரசியல் தலைமைகள் நம்பிக்கையூட்டத்தக்க வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அந்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை மீட்டெடுப்பதற்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அரசாங்கத்தை பொறுப்பு கூறச்செய்வதற்குமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளிலும், இராணுவ முகாம்களுக்கு எதிரிலும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

தேர்தல்களின் மூலம் தங்களால தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் தமது போராட்டத்திற்கு உரிய ஆதரவை வழங்கவில்லை. அந்தப் போராட்டங்களை அரசியல் ரீதியாக சரியான முறையில் வழிநடத்த முனையவில்லை. அது மட்டுமல்லாமல், தமது பிரச்சினைகளை உரிய அரச மட்டங்களில் அழுத்தமாக எடுத்துரைத்து, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுமில்லையே என்ற மனக்கசப்புடனேயே அவர்கள் தமது போரராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்திருக்கின்றார்கள்.

ஏமாற்றம் மிகுந்த வரலாறு

இத்தகைய பின்னணியிலேயே, தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிளவு என்பது சாதாரண அரசியல் ரீதியான கருத்து வேற்றுமையின் காரணமாக எழுந்துள்ள நிலைமையாகக் கருத முடியாது.

மோசமான ஒரு நீண்டகால யுத்தத்தின் பின்னர், அதுவும் யுத்தம் முடிவடைந்து எட்டரை ஆண்டுகள் கடந்த பின்பும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமல் உள்ள நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு என்பது தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் என்பதை மறந்துவிடலாகாது.

பங்காளிக்கட்சிகள், உள்ளேயே முட்டி மோதிக்கொண்டிருந்த போதிலும், வெளிப்பார்வையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையின் வடிவமாக, திகழ்ந்ததே தவிர, அரசியல் ரீதியாக பலமுள்ள ஓர் அமைப்பாக செயற்பட்டதாகக் கருத முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்திற்குப் பெருமளவில் பங்களிப்பு செய்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, அந்த அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிச் செயற்பட்டதே அல்லாமல், எரியும் பிரச்சினைகளுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்த அளவில் தீர்வு காணவில்லை. இதனால், காலத்துக்குக் காலம் அந்த மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களையே நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டு வருட ஆட்சிக்காலம் வரலாறாகப் பதிவு செய்திருக்கின்றது.

இந்த வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான செயல்வடிவங்களை உள்ளடக்கிய வலுவானதோர் அரசியல் போக்கே இப்போது அவசியமாகியிருக்கின்றது.

பரந்து விரிந்த அரசியல் அணியே அவசியம்

இந்த நிலையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவானது, துடிப்பும் செயல்வல்லமையும் கொண்ட புதிய அரசியல் தலைமைக்கு வழிகோல வேண்டும். ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக – செயல் வல்லமை அற்ற, பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மற்றுமோர் அரசியல் அணி உருவாகுவதில் பயனில்லை. அன்றாடப் பிரச்சினைகள் முதல் அரசியல் தீர்வு காணுதல் வரையில் அனைத்துப் பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுடைய அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் புதிதாக உருவாகின்ற அரசியல் தலைமை பிரதிபலிக்க வேண்டும். அத்துடன் அவற்றை நிறைவேற்றுவதற்கு இராஜதந்திர வழிமுறைகளில் செயற்பட வேண்டியதும் அவசியம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண்பதற்கான அஹிம்சைப் போராட்டங்களை முன்னெடுத்த தந்தை செல்வா, தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை வடபகுதியுடன் அல்லது வடக்கு கிழக்குடன் மட்டுப்பட்டிருக்கக்கூடாது என்ற தேவையை உணர்ந்திருந்தார். அந்தத் தலைமை மலையகத்தையும் உள்ளடக்கியதாக தேசிய அளவில் பரந்து விரிந்திருக்க வேண்டும் என விரும்பியிருந்தார்.

அதன் காரணமாகவே தமிழ்க்காங்கிரஸையும், மலையகத் தலைவர் அமரர் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் உள்ளடக்கி மூன்று இணைத் தலைவர்களைக் கொண்டதாக தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கிச் செயற்பட்டார். இனப்பிரச்சினைக்கும். அதனோடியைந்த ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குப் பரந்து பட்ட அரசியல் தலைமைகளை ஓரணியில் திரட்டி, அதன் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்கவும், பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி அரசாங்கத்தை நகர்த்திச் செல்கின்ற அரசியல் உத்தியை அவர் கையில் எடுத்திருந்தார். அதற்காக அவர் தன்னுடைய கட்சியாகிய தமிழரசுக்கட்சியிலும் பார்க்க, கூட்டு அரசியல் தலைமைக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

மோசமடைந்துள்ள நிலைமைகள்

இந்த வகையில் அவரால் கைவிடப்பட்டிருந்த அல்லது உறங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்த தமிழரசுக்கட்சிக்கு உயிரூட்டுவதற்கும், அதனை முன்னணியில் கொண்டு வருவதற்கும் இப்போது அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் முனைந்திருக்கின்றார்கள். அவர்களுடைய முயற்சியை பிழையானது என கூற முடியாது. அத்கைய முயற்சியை முன்னெடுக்கப்படக் கூடாது என்று எவராலும் வரையறுக்கவும் முடியாது.

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட அன்றைய சூழலிலும்பார்க்க, தமிழ் மக்களுடைய இன்றைய அரசியல் சூழல் மிக மோசமானதாக இருக்கின்றது. அன்று வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களுடைய தாயகம் என்ற நிலையில் வலுவானதாக இருந்தது. சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், தமிழ் மக்கள் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற பல பிரதேசங்கள் தனித்துவமான தமிழ்ப்பிரதேசங்களாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை.

சிங்களக் குடியேற்றங்கள் பெருகிவிட்டன. அந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நினைத்த நினைத்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. பௌத்தர்கள் இல்லாத, இந்துக்களும் கத்தோலிக்கர்களும் முழுமையாக வாழ்கின்ற இடங்களில்கூட பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. வரலாற்று பிரசித்திபெற்ற இந்து ஆலயமாகிய திருக்கேதீஸ்வரத்திற்கு அருகிலும், வரலாற்றுச் சிறப்பு பெற்ற மடு தேவாலயத்திற்கு அலுகிலும் இனவாத நோக்கத்திலும், மத ரீதியான ஒடுக்குமுறை நடவடிக்கையாகவும் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

பேரினவாத அணுகுமுறை கொண்ட வேலைத்திட்டங்கள்

இனங்களின் தனித்துவம் மதிக்கப்படுவதில்லை. அதேபோன்று இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களின் தனித்துவமும் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு அளிக்கப்பட்டுள்ள உயர் அந்தஸ்து முன்னிலைப்படுத்தப்படுகின்றது. சிங்கள பௌத்தர்களே நாட்டின் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் நாட்டின் எந்த மூலை முடுக்குகளிலும் வாழலாம் – வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பேரினவாத சிந்தனையுடனான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.

இத்தகைய பேரின மற்றும் மத ரீதியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களாகிய மீள்குடியேற்றப் பகுதிகளில் தேவைக்கு அதிகமான வகையில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் இராணுவ புலனாய்வாளர்களும் பேருதவி புரிந்து வருகின்றார்கள்.

யுத்த மோதல்களின்போது பெரும் எண்ணிக்கையிலான படையினர் இராணுவ நடவடிக்கைகளுக்காகப், பயன்படுத்தப்பட்டிருந்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இராணுவத்தினர் கணிசமான அளவில் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக யுத்தம் முடிவடைந்த பின்னரும் தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, மக்கள் குடியிருப்புக்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளிலும், வயல்கள் மற்றும் நீர்ப்பாசனக் குளங்களையும், அரச விவசாய பண்ணைகளையும் உள்ளடக்கி பெரும் எண்ணிக்கையான இராணுவ முகாம்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் பல இன்னும் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பி மீள்குடியமர முடியாத நிலைமை தொடர்கின்றது. அதேவேளை, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்;திருந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற வசதிகளும், அனுகூலங்களும் பேரின மக்களாகிய சிங்கள மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் தந்திரோபாய ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

யுத்தத்தி;னால் வடக்கும் கிழக்கும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், யுத்தமுடிவுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் மீள் நிர்மாணப் பணிகளில் இந்தப் பகுதிகளில் செல்வமும். வசதிகளும் வளங்களும் கொட்டிக்கிடப்பது போன்ற மாயை உருவாக்கி, அவற்றின் மூலம் கிடைக்கின்ற நன்மைகளை துறைசார்ந்த ரீதியில் சிங்கள அனுபவிக்க வேண்டும் பேரினவாத சிந்தனை சார்ந்த அணுகுமுறையில் அரசாங்கம் காரியங்களை முன்னெடுத்திருக்கின்றது.

வெளிப்படைத்தன்மை இல்லை

இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க வாழ்வாதாரத்தையோ அல்லது நிலையான அபிவிருத்தியையோ முழு அளவில் பெற முடியாத அவல நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இடம்பெயர்ந்த மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற முழுமை பெறாத பற்றாக்குறை மிகுந்த வேலைத்திட்டங்களில் சிங்கள மக்களுக்கும் பங்களிக்கின்ற கைங்கரியத்தினால் அரசாங்கத்தின் புனர்வாழ்வுப் பணிகள் அரைகுறை திட்டங்களாகவே காணப்படுகின்றன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் பலம் பொருந்தியதாகத் திகழ வேண்டிய தமிழ்;த்தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பிளவுக்கு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் எழுந்துள்ள நெருக்கடியே காரணம் என கூறப்படுகின்றது. இது மேலோட்டப் பார்வை என்றே கூற வேண்டும்.

தொகுதி பங்கீடுகளில் பிரச்சினை ஏற்படுவது வழமையான நிகழ்வாகும்.; தமிழ்த்தேசிய கூட்டமைப்பில், அங்கம் வகிக்கின்ற நான்கு அல்லது ஐந்து கட்சிகளும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் என்றே அழைக்கப்பட்டிருந்தன. பங்காளிகள் என்றால், சம பங்குடையவர்களாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறில்லாமல் கூட்டமைப்பின் தலைமக் கட்சியாகிய தமிழரக்கட்சியே கூடிய அதிகாரம் கொண்டதாகவும் கூடிய அனுகூலங்களைக் கொண்டதாகவும் செயற்பட்டு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், பங்காளிகட்சிகளுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழரசுக்கட்சி வெளிப்படைத் தன்மையைப் பேணவுமில்லை.

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்ற ரீதியில் தமிழரசுக்கட்சியே தன்னிச்சையான முடிவுகளை எடுத்துச் செயற்பட்டு வந்துள்ளது. அவ்வாறு எடுக்கப்படுகின்ற முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குக் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய பங்காளிக் கட்சிகளுக்கு உரிய வேளைகளில் விளக்கம் அளிப்பதில்லை.

அத்துடன், அந்த விடயங்கள் சார்ந்து அரசாங்கத்துடன் கொண்டுள்ள உறவு நிலை அல்லது அவை பற்றிய உண்மையான நிலைமைகள் என்பவற்றை பங்காளிக் கட்சிகளுக்கு வெளிப்படுத்துவதுமில்லை. அவற்றை மூடு மந்திரமாகத் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதும், தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலில் செயற்படுவது போன்றே செயற்பட்டு வந்துள்ளது. கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகள் குறித்து பங்காளிக்கட்சிகளுக்கு விளக்கமளிப்பது, கூட்டமைப்பின் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்குக் குந்தகத்தையே ஏற்படுத்தும் என்றும், எல்லா விடயங்களையும் எல்லோருக்கும் கூறிக்கொண்டிருக்க முடியாது என்றும் கூட்டமைப்பின் தலைமைத் தலைவர்கள் காரணம் கூறி வந்துள்ளார்கள்.

இதனால் பங்காளிக்கட்சிகளுக்கும் சரி, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளில் உண்மையாகவே என்ன நடக்கின்றது என்பது குறித்த தகவல்கள் தெரியாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இத்தகைய நிலைமைகளினால் ஏற்பட்டிருந்த அதிருப்தியே உள்ளுராட்சி சபைகளுக்கான தொகுதிப் பங்கீட்டின்போது தமிழரசுக் கட்சி வழமைபோல மேலோங்கிய நிலையில் முடிவுகளை மேற்கொள்ள முயன்ற போது வெளிப்படையான முறுகலாக – முரண்பாடாக வெளிப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு மொத்தத்தில் தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரப் போக்கிற்கு நிகரான செயற்பாடுகளே முக்கிய காரணமாக வெளிப்பட்டிருக்கின்றது.

பிரிவும் உறவும்

இத்தகைய ஒரு பின்னணியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழரசுக்கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே புதிய அரசியல் அணியொன்றை உருவாக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தக்கதோர் அரசியல் நிலைப்பாடாகக் கொள்ள முடியாது.

யுத்தத்திற்குப் பின்னரான இன்றைய அரசியல் சூழ்நிலை என்பது, தந்தை செல்வா காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவையைப் போன்றதோர் அத்தியாவசியமான அரசியல் தேவையைப் பிரதிபலித்திருக்கின்றது. தந்தை செல்வா காலத்தில் இருந்து இன்று வரையில் இனப்பிரச்சினையும், தமிழ் மக்கள் காலத்துக்குக் காலம் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளும் புரையோடியிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், அந்தப் பிரச்சினைகள் பன்றி குட்டிகளை ஈனுவதைப் போன்று ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கியிருக்கின்றன. பிரச்சினைகள் குறைவடைவதற்குப் பதிலாக அதிகரித்திருக்கின்றன. பிர்சசினைகள் பல்கிப் பெருகி பூதாகரமாகியுள்ள நிலையில், தனியானதோர் அரசியல் கட்சியினால், அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்துச் செல்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

பலம்வாய்ந்த ஒரு கூட்டு அமைப்பின் மூலமாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க முடியும். எனவே, மக்கள் அளித்துள்ள ஆணையை மீறிச் செயற்படுவதாகக் கூறப்படுகின்ற தமிழரசுக்கட்சியை எதிர்ப்பதற்காக ஒரு கூட்டு அரசியல் அணி அவசியமில்லை. அதனையும் கடந்து தமிழ் மக்களுக்கு எதிர்கால அரசியல் குறித்தும், வளமான எதிர்காலம் குறித்தும் நம்பிக்கையை ஏற்படுத்த வல்லதோர் அரசியல் அணியே இன்றைய அவசியத் தேவையாகும். சம்பந்தப்பட்;டவர்கள் இதனை, கருத்திலும் கவனத்திலும் கொண்டு செயற்பட வேண்டும்.

– பி.மாணிக்கவாசகம் –

பகிரவும்...