Main Menu

தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி தமிழில் ருவிற்!

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலும் மேற்கு வங்காளத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலிலும் மக்கள் இன்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது ருவிற்றரில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளிலும் பதிவிட்டுள்ளார். மக்கள் அதிகளவில் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பாக, இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

— Narendra Modi (@narendramodi) April 6, 2021

இதேவேளை, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்குப் பதிவு மாலை ஏழு மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் மூவாயிரத்து 998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க, மற்றும் தி.மு.க கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் என இம்முறை தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகின்றது.

இதனிடையே, தமிழகத்தில் 23 ஆயிரத்து 200 துணை இராணுவப் படையினர் உட்பட ஒரு இலட்சத்து 58 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கான தேர்தலில் 957 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அத்துடன், 2.74 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், 10 இலட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 323 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்னர்.

பகிரவும்...