Main Menu

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் திகதி  முதல் தொடங்குகிறது.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்,  மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகள் தொடங்குகிறது. மாணவர்களுக்கான விடுதிகளும் செயற்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயற்பட அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவம், அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை முதுநிலை வகுப்புகள் ஏழாம் திகதி முதல் ஆரம்பமாகும். அத்துடன் டிசம்பர் 14 ஆம் திகதிமுதல்  மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரைகள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

அத்துடன் டிசம்பர் மாதத்தின் முதலாம் திகதி முதல் உள்அரங்கங்களில் சமுதாய, அரசியல்,  பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள் அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமுலில் உள்ளது. எனினும் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கருத்திற்கொண்டும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

பகிரவும்...