Main Menu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த புதிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என சோதனை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகளை அதிகப்படுத்தவும்  நோயாளிகளுக்கான வார்டுகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன், தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

வெளிநாடு சென்று தமிழகம் திரும்பிய 93 ஆயிரம் பேர்களின் விவரங்களை விமானநிலையத்திலிருந்து பெற்றுள்ளதாகவும்  அதில் 43,538 பேர் தமிழகத்தில்தான் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலைக் கொண்டு மாவட்ட வாரியாக சுகாதாரத்துறையினர் வீடுவீடாக சென்று சோதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் கொரோனா பாதித்த இருவர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக  அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “அமெரிக்காவிலிருந்து திரும்பிய இருவர் கொரோனா நோய் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் போரூரில் வசித்து வருபவர்கள்.  கொரோனா நோய்ப் பாதிப்பிலிருந்த இவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

அளிக்கப்பட்ட சிகிச்சை அவர்களுக்குப்  பலனளித்தால் தற்போது குணமடைந்தது வீடு திரும்பியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...