Main Menu

டெல்லியில் ஒரு இலட்சம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட மருத்துவமனை – 10 ஆயிரம் படுக்கைகள்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தபடியாக டெல்லியில்தான் கொரோனா தொற்று அதிகளவில் காணப்படுகிறது.

அங்கு நாள்தோறும் சுமார் 3,000 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூரில் மத்திய அரசு சார்பில் பிரம்மாண்டமான மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

ஒரு இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் (15 கால்பந்து மைதானங்களின் அளவு)கட்டப்படும் இந்த மருத்துவமனையில் 10,200 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன.

இதில் பொது மருத்துவர்கள் 800 பேர், சிறப்பு மருத்துவர்கள் 70 பேர் மற்றும் 1,400 செவிலியர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். இந்த மருத்துவமனைக்கு சர்தார் வல்லபபாய் படேலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்தவாரம் பார்வையிட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூலை மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து மருத்துவமனை செயல்பட தொடங்கி விடும் என உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சீனாவில் கடந்த பெப்ரவரி மாதம் பிரம்மாண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டது.

அதில் 1,000 படுக்கைகள் இருந்தன. ஆனால், தற்போது டெல்லியில் அமைக்கப்படும் மருத்துவமனையானது சீன மருத்துவமனையை விட 10 மடங்குபெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...