Main Menu

ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே இன்று காலை ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதி தற்போது பற்றம் நிறைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான தமிழ் மக்களும் குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்காரணமாக முல்லைத்தீவு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...