Main Menu

ஜனநாயகத்தின் குரலை தடுக்க வேண்டாம் – கமல்ஹாசன் கோரிக்கை

ஜனநாயகத்தின் குரலை தடுக்க வேண்டாம் என சென்னை பொலிஸ் ஆணையருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த ‘குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான மக்கள் இயக்கங்கள்’ என்ற அமைப்பு பொலிஸாரிடம் அனுமதி கோரியிருந்தது.

ஆனால் போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்க மறுத்திருந்த நிலையில், இன்று இதற்கு டுவிட்டர் மூலம் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், சென்னை பொலிஸ் ஆணையராக பதவியில் இருப்பவருக்கு எனது வேண்டுகோள். தயவு செய்து இன்று வள்ளுவர் கோட்டத்தில் எழுப்ப உள்ள ஜனநாயக குரலை தடுக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.

இதனிடையே 54 அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அது குறித்த தகவலை முன்கூட்டியே தங்களிடம் தெரிவிக்காததால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சில நாட்கள் முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று சென்னை பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...