Main Menu

செர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்

செர்பிய தலைநகர் பெல்கிரேடில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலகப் பிரிவு பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நகரத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

நெருக்கடியை தவறாக கையாண்டதாக குற்றம் சாட்டி, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருவதால், வார இறுதியில் பெல்கிரேடை முடக்குவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று செர்பிய ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வுசிக் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார்.

வுசிக்கின் குறித்த அறிவிப்பின் பின்னர் பெல்கிரேடின் மத்திய சதுக்கத்தில் பல ஆயிரம் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒரு சில எதிர்ப்பாளர்கள் ஒரு பொலிஸ் சுற்றுவட்டாரத்தைத் தாண்டி, ஒரு கதவை உடைத்து நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தபோதும் பொலிஸாரினால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்பின்னர் பொலிஸாருடன் மோதல் இடம்பெற்றதாகவும் ஏராளமான பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏழு மில்லியன் மக்கள் வாழும் நாடான செர்பியாவில் 16 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 330 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது, குறிப்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் 299 புதிய நோயாளிகளும் 13 இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...