Main Menu

சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு

சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை வரவேற்ற கவர்னர்

சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

அதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சி கண்டு ரசித்தார்.

மேளதாள வாத்தியங்கள் முழங்க சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன அதிபரை உற்சாகத்துடன் நடனமாடி வரவேற்ற கரகாட்ட குழுவினர்

பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கிறார். 4 மணி வரை அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு பகல் 11.05 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஜி.கே.வாசன், பிரேமலதா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் உள்பட 53 பேர் வரவேற்றனர்.

அதன் பிறகு 12.35 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு புறப்பட்டு சென்றார். 12.55 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் திருவிடந்தையில் தரை இறங்கியது. அங்கிருந்து அவர் குண்டு துளைக்காத காரில் கோவளம் கடற்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சீன அதிபருக்கு வழிநெடுக 34 இடங்களில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டங்களுடன் கோலாகல வரவேற்புகள் அளிக்கப்படுகிறது. மாலை 5 மணி அளவில் அவர் மாமல்லபுரம் சென்று சேர்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

அதன் பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு பல்லவர் காலத்து சிற்பங்களை, கோவில்களை பார்வையிட உள்ளனர். சீன அதிபரை பிரதமர் மோடி 3 இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளார்.

முதலில் அவர்கள் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான உலக புகழ்பெற்ற அர்ஜுனன் தபசு காட்சியை காண உள்ளனர். இதற்காக அந்த பகுதி சிற்பங்கள் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று மாற்றப்பட்டுள்ளன. அங்கு சிறிது நேரம் இருக்கும் அவர்கள் பிறகு ஐந்து ரதம் பகுதிக்கு வருவார்கள்.

ஐந்து ரதம் பகுதியில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்களை மோடியும், சீன அதிபரும் பார்வையிடுவார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் கடற்கரை கோவிலுக்கு புறப்பட்டு செல்வார்கள்.

கடற்கரை கோவில் பகுதியில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாசேத்திரா நடன பள்ளி மாணவிகள், தென்னக பண்பாட்டு மையம் கலை குழுக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை மோடியும், சீன அதிபரும் கண்டு ரசிக்க உள்ளனர்.

இதற்கிடையே இரு நாட்டு தலைவர்களும் தங்களது நாடுகளின் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். சிறிது நேரம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. சீன அதிபர் மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் சென்று சேருவதை பொறுத்து கடற்கரை கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கண்ணாடி அரங்கில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடற்கரை கோவில் பகுதியில் மாலை 6 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சிகள் சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். 6.45 மணி முதல் கடற்கரை கோவில் பகுதியில் இரவு விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இரவு 8 மணி வரை சீன அதிபருக்கு பல்வேறு வகை உணவுகளுடன் விருந்து வைக்கப்படும்.

சீன அதிபரை வரவேற்க அலங்கரிக்கப்பட்டுள்ள நுழைவு வாயில்.

இரவு விருந்து முடிந்த பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு புறப்படுவார். இரவு 9 மணி அளவில் அவர் சென்னை கிண்டியில் உள்ள சோழா நட்சத்திர ஓட்டலுக்கு வந்து சேருவார். இன்று இரவு அங்கு அவர் தங்கி ஓய்வு எடுப்பார்.

முன்னதாக அவரை மாமல்லபுரத்தில் இருந்து வழியனுப்பி வைக்கும் பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார்.

நாளை (சனிக்கிழமை) 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாளை காலை உணவை சீன அதிபர் சோழா ஓட்டலிலேயே முடித்துக் கொள்வார். 9.05 மணிக்கு அவர் கிண்டி ஓட்டலில் இருந்து கோவளம் புறப்பட்டு செல்வார். 9.50 மணிக்கு அவர் கோவளம் தாஜ் ஓட்டல் சென்று சேருவார்.

அவரை பிரதமர் மோடி வரவேற்பார். அந்த ஓட்டலில் உள்ள சிறப்பு அறையில் 10 மணிக்கு சீன அதிபருக்கு டீ பார்டி கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு 10.15 மணி முதல் பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இருவரும் தனிமையில் பேசவும் திட்டமிட்டுள்ளனர்.

பகல் 11.45 மணி வரை அவர்களது பேச்சுவார்த்தை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தாஜ் ஓட்டலில் உள்ள டாங்கோ அரங்கில் சீன அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். 12 மணிக்குள் அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவு பெறும்.

இதைத் தொடர்ந்து சீன அதிபருக்கு கோவளம் தாஜ் ஓட்டலில் பிரதமர் மோடி மதிய விருந்து அளிப்பார். 1 மணி வரை மதிய விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பிறகு சீன அதிபர் பிரதமர் மோடியிடம் விடை பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்துக்கு புறப்படுவார்.

மதியம் 1.25 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வந்து சேருவார். 1.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அவரை பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் வழியனுப்பி வைப்பார்கள்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பிற்பகல் 2.05 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்வார்.

சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் மற்றும் மாமல்லபுரம் நகரம் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் இருந்து மாமல்லபுரம் வரையிலான பாதையும் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாமல்லபுரம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.

10 மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சுமார் 15 ஆயிரம் போலீசார் மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் கடலோர பகுதியில் 6 கடற்படை கப்பல்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இவை தவிர 6 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை நகரமும், மாமல்லபுரமும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளன.

பகிரவும்...