Main Menu

சுவிஸ் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் – இதுவரை நடந்தவை என்ன?

தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு இலங்கையில் உள்ள பெண் தூதரக ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் நீண்ட காலமாக அச்சுறுத்தப்பட்டார் என நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் மத்திய வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது.

அத்தோடு இந்த சம்பவம் தமது இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது மிகவும் கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்தும் மறுதினம் அதாவது நவம்பர் மாதம் 28 ஆம் திகதியே, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

தொடர்ந்து 30 ஆம் திகதி இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம் மீண்டும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு முறையான குற்றச்சாட்டுகளை தாம் அளித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை காரணமாக அவரால் சாட்சியமளிக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இதனை அடுத்து சுவிஸ் தூதரகம் தனது குற்றச்சாட்டில் விவரித்த நிகழ்வுகளை நம்புவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லையென கடந்த 2 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு சுவிஸ் தூதருக்கு எடுத்துரைத்திருந்தது.

இந்நிலையில் குற்றச்சாட்டில் விவரித்த நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிப்பதாக சுவிட்சர்லாந்தின் மத்திய வெளிவிவகார அமைச்சு 3 ஆம் திகதி அறிவித்தது.

குறித்த தினத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சாட்சியமளிக்க முன்னிலையாகும்படியும் பணித்தது.

மறுநாள்,  பாதிக்கப்பட்டவர் இன்னும் இலங்கையில் இருப்பதாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதனை அடுத்து, சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் நேற்று முன்தினம் 8 ஆம் திகதி 9 மணித்தியாலங்கள் சி.ஐ.டி.யில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அவருக்கு பாலியல் வன்கொடுமை அல்லது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக பரிசோதிக்க பெண் மருத்துவர் இல்லாததால் பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரி மறுத்துவிட்டார்.

இதனிடையே, சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அத்தோடு அவருக்கு வெளிநாடு செல்வதற்கான பயண தடையை 12 ஆம் திகதிவரை நீடித்த கொழும்பு பிரதான நீதவான், அவருக்கு பாலியல் வன்கொடுமை அல்லது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் தூதரக பெண் அதிகாரியின் உளநல பாதிப்பு தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், விசாரணையை விரைவில் நிறைவு செய்யுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று தூதரக பணியாளர் தொடர்ச்சியாக 3 வது நாளாக சி.ஐ.டி. முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...