Main Menu

எந்த ராசிக் காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்

ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியினரும் எப்படிப்பட்ட வேலையை தேர்வு செய்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

எந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்
ராசிகள்
கல்வி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. இப்படி நாம் தேர்தெடுக்கும் கல்வி முறையை பொறுத்து தான் வேலைவாய்ப்பு அமைகிறது. வேலைவாய்ப்பு சரியாக இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆகவே ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியினரும் எப்படிப்பட்ட வேலையை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்க முடியும் என்பதை குறித்து விரிவாக பார்ப்போம்.

மேஷம்

போர் குணம், சிறந்த உடல் பெலமுடன் இருக்க கூடிய செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசியினர் எப்போதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கக் கூடியவர்கள். இவர்கள் விரைவாக கற்பவர்கள் மற்றும் புத்திசாலிகள். இவர்களுக்கு பிடித்த விஷயம், விளையாட்டில் ஈடுபடுவது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டு வீரராக இருப்பது அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தரும். இது மற்றவர்களை விட ஒரு படி மேலே அவர்களை கொண்டு செல்லக்கூடியது.

ரிஷபம்

சுக போகத்தையும், ஆடம்பரத்தையும் தரக்கூடிய சுக்கிர பகவானை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் ஒரு நல்ல எழுத்தாளராக, பேச்சாளராக இருக்க முடியும். எழுத்து துறையில் இருந்தால் வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக வர முடியும்.

மிதுனம்

இந்த ராசியினர் பொதுவாக நல்ல ஊடக ஆளுமை உடையவர்கள். இவர்களின் விவேகம் இவர்களை நல்ல ஆளுமையுடையவர்களாக ஒரு சிறந்த தொகுப்பாளராக விளங்கச் செய்யும். தனது புத்திசாலித்தனம், கவர்ச்சிகர தோற்றம் மற்றும் திறமை ஆகியவற்றால் பார்ப்பவரை மகிழ செய்து விடுவர். அதுமட்டுமல்லாமல் இந்த ராசியினர் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டவர்கள். இதனால் இவர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுவர். நடிகர் தொழில் இவர்களுக்கு சிறந்தது.

கடகம்

எந்த ஒரு வேலையையும் மானசீகமாக செய்யக்கூடியவர்கள் கடக ராசியினர். கலை ஆர்வமிக்க இவர்கள் மாணவர்களின் மன நிலையைப் புரிந்து அவர்களுக்கு பிடித்தமாதிரி பாடங்களைக் கற்றுத் தரக்கூடிய நல்ல ஆசிரியராக இருக்க முடியும். மேலும் உணவு தயாரித்தல், வாசைப் பொருட்கள் தயாரித்தல், புகைப்பட கலைஞர் போன்ற கலைத்துறையில் கடக ராசியினர் சிறந்து விளங்க முடியும்.

​சிம்மம்

சூரிய பகவானை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் நல்ல ஆலோசகராக இருப்பவர்கள். ஆகவே இவர்கள் மற்றவர்களுக்கு தொழில் ஆலோசனை, சந்தேகங்களை தீர்ப்பதற்கான தொழிலை செய்தால் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கலாம். மேலும் கனிம துறை, வழக்கறிஞராக இருந்தாலும் மிகச்சிறப்பான பலனை பெற முடியும்.

கன்னி

புதன் பகவானை அதிபதியாக கொண்ட கன்னி ராசிகாரர்கள் புத்தி கூர்மை, அறிவை வழங்கக் கூடியவர்கள் மற்றும் மற்றவர்களை அக்கறையுடன் கவனிக்கும் குணம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் மருத்துவ துறை, செவிலியர்கள் போன்ற துறையில் சிறப்பாக இருப்பார்கள். மேலும் சுயநலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்யக் கூடியவர்கள். தங்கள் வேலையில் பொறுப்பாக இருக்கும் இவர்கள் ஆசிரியராகவும், செய்தியாளர்கள் ஆகவும் நன்றாக பணிபுரிவார்கள். எந்த வேலையாக இருந்தாலும் மிக சிறப்பாக செய்யக்கூடியவர்கள் கன்னி ராசி காரர்கள்

​துலாம்

நிர்வாகத்தை சிறப்பாக நடத்தும் திறமை கொண்டவர்கள் ​துலாம் ராசியினர். இவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள். இவர்கள் வணிகத்தை நிர்வகிக்கும் விதம் பாராட்டுக்கு உரியது. இவர்கள் வழக்கறிஞர், இசைக்கலைஞர், நடிப்புத் துறையில் சிறந்தவர்களாக வாய்ப்பு உண்டு. கடின முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு உயர்ந்த இடத்தில் கொண்டு செல்ல முக்கிய காரணமாக அமையும்.

​விருச்சிகம்

கடின உழைப்பாளியாக இருக்கும் இவர்கள் செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்டவர்கள். இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியர்கள் என வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடிய இவர்கள் பிறக்கும் போதே கலைஞராக இருப்பார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுகிறார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் புகழ்பெறுவர். மருத்துவத்தில் உயர்ந்த இடத்தில் வர வாய்ப்பு உண்டு.

​தனுசு

குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட முடியும். ஒரு நல்ல ஆராய்ச்சியாளராக, பேராசிரியராக மாறும் வாய்ப்பு உண்டு. வழக்கறிஞர், தட்டச்சு, நடிப்பு, எழுத்தாளர், மருத்துவம் போன்ற துறையில் புகழ் அடைவர். மேலும் அரசியல்வாதியாகவும் வாய்ப்புகளும் ஏற்படலாம்.

​மகரம்

திடமான மனம், நல்ல திறமை படைத்த மகர ராசியினர் சனி பகவானை அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் வணிக தொழிலில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும். இவர்களை நல்ல தலைவர்களாக வாய்ப்புள்ளது. தான் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி இருப்பவர்களும் நேர்மையான முறையில் எந்த வேலையும் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இவர்கள். வழக்கறிஞர் , உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி சுரங்கம் போன்ற தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்

அனைவருடனும் எளிதில் பழக்கக்கூடிய கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் தன்னைப் போல சமமாகவும், நியாயமாகவும் பார்க்கக்கூடிய எளிமையான குணம் கொண்டவர்கள். இவர்கள் பொறியியல், விஞ்ஞானம், கல்வித்துறை தொடர்பான துறையில் வல்லவர்கள்.

​மீனம்

புகைப்படங்கள் எடுப்பது, கதை எழுதுவது, கதை கேட்பது, படம் வரைவது, நல்ல படங்களை பார்ப்பது, கண்ணாடி பொருட்களை சேர்ப்பது போன்ற வேலைகள் மீன ராசி காரர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். மேலும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்க கூடியவர்கள்.

பகிரவும்...