Main Menu

சீனாவுக்கு மீண்டும் சிக்கல்: 1 கோடியே 10 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மையப் பகுதி என கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முதல் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியதாக அறியப்படும் வுஹான் நகரில் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.

அங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் குறித்த வைரஸ் பரவலினால் பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்தமையினைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தால் குறித்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் உட் செல்வதற்கோ உள்ளிருந்து யாரும் வெளியேறுவதற்கோ அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 76 நாட்கள் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைக்கு முகம் கொடுத்து வந்த மக்கள் பட்டினி, மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடி என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

ஏப்ரல் 3ஆம் திகதி முதல் வுஹான் நகரில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவே இல்லை. இந்நிலையில் 11 வார கால முடக்க நிலை ஏப்ரல் 8ஆம் திகதி தளர்த்தப்பட்டது.

இந்தநிலையில், மீண்டுமொரு கடினமான நிலையை எண்ணி, வுஹான் நகர மக்கள் தற்போதே வருந்த தொடங்கியுள்ளனர்.

பகிரவும்...