Main Menu

சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்!

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம், சீன அரசிற்குச் சொந்தமான  China Merchants Port Holdings Company Limited (CMPort) நிறுவனத்துடன்  அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான  சலுகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.  இந்த உடன்படிக்கையின் பிரகாரம், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 70 சதவீத உரிமை சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுவதுடன் சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு மீதிப் பங்கு உரிமையாக வழங்கப்படுகிறது.

அம்பாந்தோட்டைத் துறைமுக உடன்படிக்கையானது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தன் மீதான கடன்சுமையைக் குறைப்பதற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு வழங்குவது மட்டுடே சிறந்த தெரிவாகக் கொண்டுள்ளது.

தற்போது சிறிலங்கா மிகையான கடன் சுமைக்குள் சிக்கித் தவிக்கின்றது. சிறிலங்கா நடுத்தர வருமான நாடாகத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ள அதேவேளையில், சிறிலங்கா பெற்றுக் கொண்ட சலுகைக் கடனானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறிலங்கா அரசாங்கம் வர்த்தகக் கடனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதற்கும் அப்பால், சீனா எக்சிம் வங்கியால் சிறிலங்காவிற்கு உயர் வட்டி வீதத்தில் கடன் வழங்கப்பட்டது.  இதற்கான நிதியானது வர்த்தக வட்டி விகிதத்தில் இறையாண்மைப் பத்திரத்தின் ஊடாகத் திரட்டப்பட்டது.

இதன் விளைவாக, கடந்த பத்தாண்டாக சிறிலங்காவின் வெளிக் கடனின் அளவானது வியத்தகு அளவில் மாறியுள்ளது. 2006ல் சிறிலங்கா பெற்றுக் கொண்ட வெளியகக் கடனின் 6 சதவீதம் மட்டுமே வர்த்தகக் கடனாகக் காணப்பட்டது. ஆனால் 2012ல் இது 50 சதவீதமாக அதிகரித்தது. குறிப்பாக இதற்கான வட்டிவீதம் மிகவும் உயர்வாகக் காணப்படுகிறது. இக்கடன் சுமையானது சிறிலங்காவை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

2006ல் சிறிலங்காவின் வெளியகக் கடன் 10.6 பில்லியன் டொலராகும். கடந்த ஒரு பத்தாண்டிற்குள் வெளியகக் கடன் 140 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2016ன் இறுதியில், சிறிலங்காவின்  வெளியகக் கடன் 25.3 பில்லியன் டொலராக அதிகரித்தது. இது நாட்டின் மொத்தத் உள்நாட்டு உற்பத்தியின் 34 சதவீதமாகும்.

சிறிலங்காவால் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்தக் கடன் தொகையில் 13 சதவீதம் அதாவது 3.3பில்லியன் டொலர் சீனாவிற்குச் சொந்தமானதாகும். இதில்  அதிகளவான கடன் கடந்த பத்தாண்டில் பெறப்பட்டதாகும்.

சிறிலங்காவானது சீனாவிடமிருந்து அதிகளவான கடனைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னைய ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

hambantota-agreement

மேற்குலக நாடுகளில் ராஜபக்ச ஒரு பிரபலமான தலைவர் அல்ல. ஆனால் ராஜபக்ச, சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணியிருந்தார். அத்துடன் ராஜபக்ச தனது நாட்டில் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கான கடனை சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதில் தயக்கம் காண்பிக்கவில்லை.

அம்பாந்தோட்டைத் துறைமுகமானது 99 ஆண்டு கால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துறைமுகமானது சீனாவின் நிதியில் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. சீனாவிடமிருந்து கடன் பெற்றே இத்துறைமுகம் கட்டப்பட்ட போதிலும், இது சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது எனக் கருதமுடியாது.

ஆனால் சிறிலங்காவில் ஆட்சி மாறிய பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டுவதற்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை அடைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியாக இருந்ததால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நீண்டகாலக் குத்தகைக்கு வழங்குவதென சிறிலங்கா தீர்மானித்தது. அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மீதும் இதற்கு அருகிலுள்ள மத்தல விமான நிலையத்தின் மீதும் இடப்பட்ட முதலீட்டிற்கு எதிர்பார்த்தளவு வருவாய் கிட்டவில்லை.

இதனால் சீனாவின் எக்சிம் வங்கிக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவது சிறிலங்காவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் பகிர்ந்து கொள்வதென சிறிலங்கா தீர்மானித்தது.

சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனானது சிறிலங்காவின் மூலோபாய அமைவிடங்களை அபிவிருத்தி செய்வதற்கு முதலீடு செய்யப்பட்டதுடன் தற்போது இவற்றில் சீனா தனது அதிகாரத்தைச் செலுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார இராஜதந்திரத்தின் ஊடாக தென்னாசியப் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் சீனாவின் மூலோபாயத்தை இந்தியா மிகவும் நெருக்கமாக அவதானித்துள்ளது. இது தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் இதன் விளைவாக சிறிலங்கா அரசாங்கமானது இருதலைக் கொள்ளி நிலைக்குத் தள்ளப்பட்டது.

சீனாவின் சிறிலங்கா மீதான பொருளாதார அதிகாரத்துவமானது கடன் என்பதுடன் மட்டுமல்லாது, முதலீடுகளையும் நோக்காகக் கொண்டிருந்தது. 2005ல், சீனாவிடமிருந்து பெறப்பட்ட வருடாந்த வெளிநாட்டு நேரடி முதலீடானது 1 மில்லியன் டொலருக்கும் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் 2014ல் இது 400 மில்லியன் டொலர் வரை அதிகரித்தது. இக்கடன் மூலமே கொழும்புத் துறைமுக நகரத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டமானது பின்னர் கொழும்பு அனைத்துலக நிதி மையமாக பெயர் மாற்றப்பட்டது. இத்திட்டமானது சிறிலங்காவின் இறையாண்மை தொடர்பான கேள்வியை எழுப்பியது. அதாவது இத்திட்டத்தின் மூலம் கொழும்புத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலம் 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டதால் இது சர்ச்சைக்குரிய திட்டமாக அடையாளம் காணப்பட்டது.

கடந்த பத்தாண்டில், சீனாவிடமிருந்து 1.1 பில்லியன் டொலர் நிதி நேரடி வெளிநாட்டு முதலீடாகப் பெறப்பட்டது. இதே காலப்பகுதியில் சிறிலங்காவால் அமெரிக்காவிடமிருந்து 400 மில்லியன் டொலர் மட்டுமே நேரடி வெளிநாட்டு முதலீடாகப் பெறப்பட்டது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள்   மேற்குலகின் அதிருப்தியைச் சம்பாதிக்கக் காரணமாகியது. இதனால் சிறிலங்கா வேறெந்தத் தெரிவும் இல்லாததால் சீனாவின் உதவியை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளியது. பணம் தேவைப்படும் இடத்தில் சீனா இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

சீனா தனது பூகோள அரசியல் இருப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் ஒரு அணை ஒரு பாதை என்கின்ற திட்டத்தை அமுல்படுத்தி வருகிறது. சீனா தனது திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக இந்திய மாக்கடலில் உள்ள சில நாடுகளில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தவகையில் சிறிலங்காவும் சீனாவின் உதவியைப் பெறும் நாடுகளில் ஒன்றாக உள்ளதால் சிறிலங்கா தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைக் கைநழுவ விரும்பவில்லை.

சிறிலங்காவில் மட்டுமல்லாது பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்திலும் பங்களாதேசிலும் சீனா முதலீடு செய்துள்ளது. இந்தவகையில், சிறிலங்காவானது வீழ்ச்சியடைந்திருந்த தனது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக சீனாவின் உதவியைப் பயன்படுத்தியது.

எனினும், கடன் போன்ற இராஜதந்திர நடவடிக்கைகளைச் சரியாகக் கையாளாவிட்டால் சிறிலங்கா சீனாவின் பொறிக்குள் விழுந்துவிடும் ஆபத்து உள்ளது.

ஆகவே சிறிலங்காவானது இந்த விடயத்தை மிகவும் சரியான வகையில் கையாள்வதுடன் இது சிறிலங்காவிற்கு ஒரு சவாலான பணியாகவும் காணப்படும் என்பதால் தேவைப்படும் இடங்களில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதன் மூலம் சமவலுவைப் பேணித் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை சிறிலங்கா கண்டறிய வேண்டும்.

இதுமட்டுமல்லாது அவசியமான வேளைகளில் தனது நாட்டின் தேசிய நலனை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா மறந்து விடக் கூடாது.

வழிமூலம்        – The diplomat
ஆங்கிலத்தில்  – Umesh Moramudali
மொழியாக்கம் – நித்தியபாரதி

பகிரவும்...