Main Menu

சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கர வாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன – இந்தியா குற்றச்சாட்டு!

கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபையின் 75வது அமர்வின் ஒருபகுதியாக உலக யூத காங்கிரஸ் அமைப்பின் சார்பில் ‘யூத விரோதப்போக்கை எதிர்ப்பதில் ஐ.நா.வின் பங்கு’ என்ற தலைப்பில் இணையவழியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி, “யூத விரோதப்போக்கு உள்பட மத அடிப்படையிலான அனைத்துவகை பாகுபாடுகள் உலகில் எங்கு நடந்தாலும் அதை இந்தியா கண்டிக்கிறது.

இப்போதும் சில நாடுகள் கொரோனா  நோய்த் தொற்றைப் பயன்படுத்தி உலக நாடுகளை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தும் வேலையைச் செய்துவருகின்றன. அப்பாவி மக்களைக் கொல்வதிலிருந்தும்  மத வெறுப்பைப் பரப்புவதிலிருந்தும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதிலிருந்தும் அவர்களை கொரோனா  நோய்த் தொற்று தடுக்கவில்லை.

யூத விரோதத்தையும் வெறுப்பையும் பரப்புவதை மட்டுமன்றி மதத்தின் அடிப்படையில் உலகைப் பிளவுபடுத்துவதையும் அந்நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தங்களது சமூகங்களுக்குள் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும்,  குறுங்குழுவாத வன்முறைகளைத் தடுப்பதற்கும்,  சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

பயங்கரவாதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்பதை ஐ.நா. சபை தீர்க்கமாகப் பேசுவது முக்கியம் என நாங்கள் நம்புகிறோம். இந்தியா  உலகின் அனைத்து முக்கிய மதங்களுக்கும் சொந்தமான நாடு.

இந்திய நாகரிகம்  என அழைக்கப்படும் இந்த நதியில்  ஒவ்வொரு மதமும் ஜனநாயக அமைப்பு,  பன்மைத்துவம்,  நல்லிணக்கம்,  ஆகியவற்றின் கட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...