Main Menu

சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமான மேரி முபைவா, பலத்த பாதுகாப்புக்கு இடையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அப்போது அவர் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவை, மருத்துவ சிகிச்சைக்காக தென்னாபிரிக்கா- பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, கொல்ல முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், அவர் மீது பண மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மேரி முபைவா முற்றாக மறுத்து, தனக்கு பிணை தருமாறு நீதிமன்றதில் கோரினார். எனினும் அதனை மறுத்த நீதிமன்றம் அவரை பொலிஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

அத்தோடு, இவ்வழக்கின் விசாரணை டிசம்பர் 30ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

மருத்துவ சிகிச்சைக்காக சீனா சென்ற 63வயதான துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்கா, நான்கு மாதங்களுக்கு பிறகு கடந்த மாதமே நாடு திரும்பியிருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவின் அரசு கவிழ்க்கப்பட்டதற்கு சிவெங்கா முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...