16 வருடங்களாக விசித்திரமான இடமாற்றங்களுக்கு உள்ளான ஆர்ஜன்டீன முதல் பெண்மணியின் உடலம்
ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி ஈவா பெரோன் 1952 ஜூலை 26 அன்று புற்றுநோயால் தனது 33 ஆவது வயதில் உயிரிழந்தார்.
இந்தநிலையில் பெரோனின் கணவரும் ஜனாதிபதியுமான ஜுவான் பெரோனின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது உடல் ஸ்பானிய உடற்கூறியல் நிபுணர் பெட்ரோ அராவால் திரவப் மெழுகு மற்றும் கிளிசரின் நுட்பத்தைப் பயன்படுத்தி நீண்ட காலம் கெடாதவாறு பதப்படுத்தப்பட்டது.
அன்புடன் எவிடா என்று அழைக்கப்பட்ட அவரது உடலம், தொழிலாளர்களுக்கான நினைவுச்சின்னம் கட்டப்படவிருந்த தொழிலாளர் அமைச்சின் கட்டிடத்தில் வைக்கப்பட்டது.
அதன் அடியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சவப்பெட்டியே அவரது இறுதி ஓய்விடமாக அமையவிருந்தது.
1955-இல் ஜுவான் பெரோனின் ஆட்சி இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து, எவா பெரோனின் உடல் அவரது ஆதரவாளர்களுக்கு ஓர் எதிர்ப்புச் சின்னமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக புதிய இராணுவ ஆட்சியால் அவரது உடலம் கடத்தப்பட்டது.
இந்தநிலையில் அவரது உடலம் 16 ஆண்டுகளாக பல இடங்களில் மறைக்கப்பட்ட சம்பவங்களை சர்வதேச ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஈவாவின் உடலம் பியூனஸ் அயர்ஸ் நகரின் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம், திரையரங்கின் திரைக்குப் பின்னால், மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் எனப் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
1957-இல் இத்தாலிக்கு அந்த உடலம் கொண்டு செல்லப்பட்டு, ‘மரியா மக்கி டி மேஜிஸ்ட்ரிஸ்’ என்ற போலிப் பெயரில் மிலன் நகரில் புதைக்கப்பட்டது.
1971-இல் ஆர்ஜென்டினாவின் புதிய அரசு, ஸ்பெயினில் தஞ்சம் புகுந்திருந்த ஜுவான் பெரோனிடம் ஈவா பெரோனின் உடலை ஒரு வெள்ளிப் பேழையில் ஒப்படைத்தது.
இதனையடுத்து 1973-இல் ஜுவான் பெரோன் மீண்டும் ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதியானார்.
எனினும் 1974-இல் அவர் காலமானதை தொடர்ந்து, ஈவா பெரோனின் உடல் மீண்டும் பியூனஸ் அயர்ஸ்க்குக் கொண்டு வரப்பட்டு, டொமிங்கோ டெல்லெச்சியா என்ற கலைஞரால் சீரமைக்கப்பட்டது.
அத்துடன் 1976 அக்டோபர் மாதம், ஈவா பெரோனின் உடலம் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு பலத்த பாதுகாப்பு கொண்ட நிலத்தடி கல்லறையில் 5 மீட்டர் ஆழத்தில் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.
ஈவா பெரோன் தனது 33வது வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்த பிறகு, அவரது உடலைப் பதப்படுத்துவதற்கு அவரது கணவருக்கு அரசியல் காரணங்கள் இருந்தன.
அவரது ஏழ்மையான கிராமப்புறப் பின்னணியும், முதல் பெண்மணியாக அவர் ஆற்றிய தொண்டுப் பணிகளும் அவருக்கு உழைக்கும் வர்க்கத்தினரின் தீவிர ஆதரவைப் பெற்றுத் தந்திருந்தன.
எனவே, உடலைப் பதப்படுத்துவதன் மூலம் அவரது கணவர் ஈவாவின் உடலத்தை பாதுகாக்க விரும்பினார் என்று பெரோனிசத்தின் வரலாற்றாசிரியர் ஃபிளாவியா ஃபியோருச்சி தெரிவித்துள்ளார்.
