Main Menu

சாமியாரின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்: போலீசார் குவிப்பு

தி.மு.க. இளைஞரணி தலைவரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்த உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் பேசினார். இதனை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பையர்நத்தம் பஸ் ஸ்டாப் அருகே தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்றது. இதில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பையர் நத்தம் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்று கூடி சாமியாரின் உருவ பொம்மையை எடுத்து வந்தனர். அப்போது சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் உருவ பொம்மைக்கு தீவைத்து எரித்தனர். இந்த போராட்டத்தில் சாமியாருக்கு எதிராக தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரமஹம்சா ஆச்சார்யாவை கண்டித்து அவருடைய உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக காவேரிப்பட்டணம் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பகிரவும்...