Main Menu

சவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – ஹவூதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல்!

சவுதி அரேபியாவின் முக்கிய பொருளாதார வளத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய யேமன் நாட்டின் ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி மையங்களை தாக்கியது போன்று மேலும் பல தாக்குதல்களை தொடருவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் அப்காய்க் எரிபொருள் சுத்திகரிப்பு தொழிற்சாலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 50 லட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் எரிந்து விட்டதாக சவுதி அரசாங்கம் தெரிவித்தது.

உலகிற்கு தேவையான 10 சதவீத மசகு எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில், ஹவூதி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் நினைத்த தருணத்தில் எங்களது நெடியக்கரங்கள் சவுதி அரேபிய நாட்டின் எந்த பகுதிக்கும் நீளும் என்பதை அந்தநாட்டு அரசாங்கத்துக்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

யேமன் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹவூதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் மீது உள்நாட்டு அரச படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி அரேபியா மீது அண்மைக் காலமாக ஹவூதி போராளிகள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...