Main Menu

தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி

தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய அக்கட்சியின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தை நேற்று திறந்து வைத்த ஜனாதிபதி, 2012 ஆம் ஆண்டு குறித்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய மோசடி இடம்பெற்றதாக கூறியிருந்தார்.

2012 ஆம் ஆண்டுதான் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் இதற்காக சீனாவிலிருந்து எக்ஸிம் வங்கி ஊடாக கடனுதவியாக நிதி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்த ஜனாதிபதி இதற்காக அரசாங்கமும் ஐந்து தரப்பினருடன் உடன்படிக்கையியை செய்துக்கொண்டதாக கூறினார்.

ஆனால் 2012 ஆம் ஆண்டு இதன் அடித்தளம் அமைப்பற்காக 200 கோடி ருபாய், அலிப் என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்றும் ஆனால், அந்த நிறுவனம் சிறுது காலத்தில் காணாமல் போய்விட்டது எனவும் கூறியிருந்த ஜனாதிபதி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 200 கோடி ரூபாயும் எங்கு சென்றது என்று தெரியவில்லை என கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நேற்றே கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “தாமரைக் கோபுர திறப்பு விழாவுக்கு அழைக்கவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரியின் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை” என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...