Main Menu

சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு: சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!

சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கள்கிழமை) குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையிலான ஆயுத விற்பனை, கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2018ஆம் ஆண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய 100 ஆயுத தளவாட உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டில் ஆயுத விற்பனை மூலம் 42,000 கோடி டொலர்கள் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அமெரிக்காவைச் சேர்ந்தவை.

சர்வதேச ஆயுதச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் 59 சதவீதம் பங்கு வகிக்கின்றன. அமெரிக்க நிறுவனங்களின் விற்பனை மட்டும் கடந்த ஆண்டில் 24,600 கோடி டொலர்களாக உள்ளது. இது, அதற்கு முன்னைய ஆண்டைவிட 7.2 சதவீதம் அதிகமாகும்.

சர்வதேச ஆயுதச் சந்தையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ரஷ்ய நிறுவனங்கள் உள்ளன. எனினும், அந்த நிறுவனங்கள் சந்தையில் 8.6 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றன. ரஷ்யாவை அடுத்து பிரித்தானியா 8.4 சதவீதமும், பிரான்ஸ் 5.5 சதவீதமும் சர்வதேச ஆயுதச் சந்தையில் பங்கு வகிக்கின்றன.

சீனாவின் ஆயுத விற்பனை குறித்து போதிய தகவல் இல்லாததால், இந்தப் பட்டியலில் சீனா சேர்க்கப்படவில்லை. எனினும், ஆயுத விற்பனையில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களில் 3 முதல் 7 சீன நிறுவனங்கள் இடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது’ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...