Main Menu

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது – பிரதமர்

போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிதிரண்ட போது தமது உயிரை பணயம் வைத்து அதனை பாதுகாக்க செயற்பட்டவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம்  ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிலையியற் கட்டளையை தயாரிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அந்த முறைமையை தயாரிக்கும் அதிகாரம்  அரசியலமைப்பு பேரவைக்கு காணப்படுகிறது.

அந்த வகையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை  ஊடாக அரசியலமைப்பு பேரவையின் உள்ளக விடயங்கள் பிரசித்தப்படுத்தப்பட்டு அதன் உயரிய தன்மையை பாதுகாக்கும் வாய்ப்பு எதிர்க் கட்சியினால் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டின் மிக மோசமான சூழ்நிலையின் போது தமது உயிரையும் பணயமாக வைத்து செயற்பட்டவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன. அந்த வகையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தோல்வியானது ஜனநாயக பாராளுமன்ற முறைமைக்கு ஏற்படுத்தப்படும் வெற்றியாகும்.

போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்த போது சபாநாயகர் அன்று பதில் பிரதமருடன் இணைந்து பாராளுமன்றத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினராவார். 1983 ஆம் ஆண்டு இடைக்கால தேர்தல் நடந்த சந்தர்ப்பத்தில்  அவர் ஹக்மன தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர் தேசிய ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ளும் போது தமது கட்சியை விட நாட்டுக்கு முதலிடம் கொடுத்து தீர்மானங்களை மேற்கொண்டவர். அந்த வகையில் அவர் சிறந்த கொள்கையுடைய தலைவர் என குறிப்பிட முடியும் என்றார்.

பகிரவும்...