Main Menu

சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தி விட்டார்; முதலமைச்சர்

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக முதலமைச்சர் விமர்சித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரை ஏற்புடையதாக இல்லை என்று கூறி அதனை ஆளுநர் வாசிக்க மறுத்த நிலையில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றிய முதமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். தான் முதலமைச்சராக பொறுப்பேற்று 33 மாதங்கள் ஆனதாகவும், இவை முன்னேற்ற மாதங்கள் என்றும் சாதனை மாதங்கள் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு அளித்த உரையை ஆளுநர் வாசிக்க மறுத்தது குறித்து பேசிய முதலமைச்சர், அரசின் கொள்கை அறிக்கையை அமைச்சரவை தயாரித்து தருவதை அப்படியே சட்டப்பேரவையில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றார். ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே பேரவையை பயன்படுத்திக் கொண்டாரோ என கருதும் வகையில் நடந்து கொண்டதாவும் விமர்சித்தார்.

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக கூறிய முதலமைச்சர், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்துவதோடு, மக்களாட்சி மாண்புக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு மாறாக ஆளுநர் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது போன்ற பல தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள் தாங்கள் என கூறிய முதலமைச்சர், தடை கற்கள் உண்டு என்றால், அதை உடைத்து 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வருவதாகவும், இதுபோன்று சிறுபிள்ளை விளையாட்டு செயல்களை பார்த்து பயந்து விட மாட்டோம் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருவதைப் பார்த்து நம் இன எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருவதாகவும், அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மாபெரும் சாதனை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆதிக்க குவியலை அகற்றுவதும், அடிமைப் பள்ளத்தை நிரப்புவதும் இவர்களது கோபத்திற்கு காரணம் என்றும் அந்த கோபத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெளிக்காட்டும் நிலையில், அரசியல் சட்டப் பதிவியில் இருக்கும் ஆளுநரும் அதற்கு விதிவிலக்கல்ல என்றார். அதற்காக நாம் அமைதியாக இருந்துவிட முடியாது எனக் கூறிய முதலமைச்சர், ஒவ்வொரு நாளும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக அமைய வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பகிரவும்...