Main Menu

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை வாக்கெடுப்பு

சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்பதற்காக டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் நாளை சென்னை வருகிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் பல தொகுதிகளை இழந்த நிலையில் இந்த தேர்தலில் மீண்டு எழுந்தது. அந்த கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் 18 எம்.எல்.ஏ.க்களில் சட்டசபை தலைவர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல் முறை எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள், இரண்டு மற்றும் 3 முறை எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிடையே இந்த பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

இந்த நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்பதற்காக டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் நாளை சென்னை வருகிறார்கள்.

சத்தியமூர்த்தி பவனில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்கிறார்கள்.

தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் முதல்முறை எம்.எல்.ஏ. ஆனவர்கள். 5 பேர் 2 முறை எம்.எல்.ஏ. ஆனவர்கள். 2 பேர் 3 முறை எம்.எல்.ஏ.ஆனவர்கள். ஒரே ஒருவர் 4 முறை எம்.எல்.ஏ.ஆனவர்.

கட்சி ஈடுபாடு, சட்டசபை செயல்பாடு, விவாதிக்கும் திறன், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்து தேர்வு செய்கிறார்கள்.

விஜயதரணி

அந்த வகையில் விஜயதரணி தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர். பிரின்சும் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருப்பவர்.

முனிரத்தினம் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மூப்பனார் தலைமையிலும், ஜி.கே. வாசன் தலைமையிலும் த.மா.கா. தொடங்கப்பட்ட போது காங்கிரசில் இருந்து விலகி அங்கு சென்று வந்தவர். இந்த தேர்தலிலும் சீட் வழங்கும் போது பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.

செல்வ பெருந்தகை ஒரு முறை வி.சி.க. விலும் தற்போது காங்கிரசிலும் எம்.எல்.எ.வாகி இருக்கிறார்.

இவர்களுக்குள் தான் போட்டி நிலவுகிறது. மேலிட பார்வையாளர்கள் கருத்துக்களை கேட்டு டெல்லி மேலிடத்தில் தகவல் கொடுப்பார்கள். அதையடுத்து தலைவர் யார் என்பதை டெல்லி தலைமை அறிவிக்கும்.

பகிரவும்...