Main Menu

சசிகலா வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சொத்து முடக்கத்திற்கான அறிவித்தல்

சென்னை போயச் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துக்களை முடக்கியதற்கான அறிவித்தலை வருமான வரித்துறையினர் ஒட்டினர்.

வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 இலட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்ளூர் தனி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த தீர்ப்பை இரத்து செய்ததோடு, நான்குபேரையும் விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அதில் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த தீர்ப்பினை அவர்கள் உறுதி செய்தனர். இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அண்மையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியதுடன், பினாமி தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் சசிகலா வாங்கிய சொத்துக்களை முடக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில், சொத்துக்களை முடக்கியதற்கான அறிவித்தலை வருமான வரித்துறையினர் ஒட்டியுள்ளனர்.

முடக்கப்பட்ட சசிகலாவின் 300 ரூபாய் கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்தல்களை ஒட்டினர். சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...