Main Menu

கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற எமது நிலைப் பாட்டினை அறிவிப்போம் – சம்பந்தன்

வேட்பாளர்கள் தங்கள் கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற தமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறித்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. அது அக்கட்சியை பொறுத்தவரை ஒரு ஆரோக்கியமான அறிகுறி.

ஆனால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தங்கள் கொள்கை நிலைகளை, குறிப்பாக இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தெரிவித்த பின்னரே ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்போம். அதன் பின்னர் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்” என கூறினார்.

இதேவேளை தமிழ்த் முற்போக்குக் கூட்டணியும் யாரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வரவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக மலையக தமிழ்ச் சமூகம் தொடர்பாக தங்களிடம் சில கோரிக்கைகளும் கவலைகளும் உள்ளன என்றும் அவற்றை வேட்பாளருடன் விவாதிப்போம் எனவும் தெரிவித்தார்.

ஆனால் முஸ்லிம் கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டைக் கூறவில்லை, ஆனால் அவர்கள் அரசாங்கத்தில் இருப்பதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...