Main Menu

கொரோனா வைரஸ்: வடக்கு – கிழக்கில் சிறப்பு ஆய்வுகூடங்கள் இல்லை..!

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தமிழர்களும் முஸ்லிம் மக்களுக்கு செறிந்து வாழும், வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் தொற்றை கண்டறியக்கூடிய சிறப்பு ஆய்வுகூடங்கள் எதுவும் அமைக்கப்படாமைத் தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கண்டறியும் வசதி அரச வைத்திய ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடம், கராபிட்டி மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றின மூலமாக மாத்திரமே மேற்கொள்ள முடியும், என்பதோடு, குறித்த ஆய்வுகூடங்கள் சகோதர இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலேயே அமைந்துள்ளன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் ஒரு நிலையமேனும் அமைக்கப்படவில்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் காணப்படும் எவரும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்வதைவிட அரசாங்கத்தின் பொது தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக அழைப்பினை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

பெரும்பாலான இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கும் இன்ப்ளூவன்ச வைரஸின் அறிகுறிகள் கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மிகவும் ஒத்தவையாக காணப்படுப்படுகின்றன.

எவ்வாறாயினும், இருமல், காய்ச்சல் மற்றும் சளி காணப்படுமாயின் இதுத் தொடர்பாக அவசியற்ற அச்சம்கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், வைரஸை விரைவாகவும் துல்லியமாகவும் அடையாளம் காண்பதற்கு சரியான இடத்திற்கு செல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள், சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றுவது, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் ஒரு துறையில் பணியாற்றுவது, கொரோனா வைரஸ் நோயால் கண்டறியப்பட்ட ஒரு நபருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல் போன்ற பிற காரணிகளை தவிர்த்தல் ஆரோக்கியமான செயற்பாடாக அமையுமென சுகாதாரத் தரப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...