Main Menu

கொரோனா வைரஸ் : பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தல்!

பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும்  சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், “பண்டிகை காலம்,  மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கட்டுமான பகுதிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த இரு நாட்களாக தஞ்சாவூரில் ஒரு கட்டுமான பகுதியிலும்,  சென்னை தண்டையார்பேட்டையில் பீகாரில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளாவிடில் பல கொரோனா பாதிப்பை கண்டறியாமல் போய்விடும். எனவே இனிவரும் 14 முதல் 28 நாட்களும் மிகவும் முக்கியமானது. பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...