Main Menu

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாடசாலைகளை மூடுவதற்கு வலியுறுத்து!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பாடசாலைகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம்  பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரவித்த அவர், “கொரோனா வைரஸானது காற்றிலோ, நீரிலோ பரவுவதில்லை. மாறாக மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

3 அடிக்கும் குறைவான தொலைவு இடைவெளியில் நெருங்கி இருப்பதால் தான் குறித்த வைரஸ் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மனிதர்கள் கூட்டமாகக் கூடுவதை தடுப்பதுவே இந்த வைரஸை கட்டுப்படுத்த எடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவுரைப்படி தமிழகத்தில் அனைத்துப் பாடசாலைகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சந்தைகள்,  மாநாடுகள்,  திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும்,  இடங்களையும் மூட வேண்டும். அப்போதுதான் கொரோனா  வைரஸைத் தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் இதுவரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். அவரும் இப்போது குணமடைந்துவிட்டார். அதை நினைத்து தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிடக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...