Main Menu

கொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஸ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது. அதற்கமைய இந்த கொடிய வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 74 ஆயிரத்து 312 ஆக பதிவாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ரஸ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது.

ரஸ்யாவில் இந்த தொற்று காரணமாக 6 இலட்சத்து 74 ஆயிரத்து 515 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை விடவும் அங்கு 203 பேரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 இலட்சத்து 74 ஆயிரத்து 312 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 3 நாட்களாக நாளாந்த பாதிப்பு 20,000க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

சில தினங்களாக இறப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 613 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,288ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் இந்த தொற்றுக்குள்ளான 245,940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், 409,083 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...