Main Menu

கொரோனாவால் உலக முழுவதும் 1.5 கோடி பேர் இறப்பர் – பீதியை கிளப்பும் ஆய்வு முடிவுகள்

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் 1.5 கோடி பேர் இறக்கும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டியுள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் கொரோனா குறித்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1.5 கோடியாக இருக்கலாம்.

இதுமட்டுமின்றி உலக பொருளாதாரத்திலும் கொரோனா மரண அடியை ஏற்படுத்தும் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் ரூபாய் 161 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த வைரஸ் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்லும் பயணிகள் மூலமாகவே பரவுகிறது.

இதனால் வெளிநாட்டு விமான சேவை கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பல நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.

மேலும், சீனா போன்ற உற்பத்தி நாடுகளை சார்ந்துள்ள பல துறைகள் சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலக பொருளாதாரமும் குறிப்பாக ஆசிய பொருளாதாரமும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கியும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, வைரஸ் பாதிப்பால், வரும் மாதங்களில் உலகளாவிய ஜிடிபி 0.1-0.4 வரை சரிய வாய்ப்புள்ளது. அதாவது, 5.4 லட்சம் கோடியிலிருந்து 25 லட்சம் கோடி வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சீனா தனது ஜிடியில் 0.8 சதவீதம், அதாவது 7.2 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஆசியாவின் மற்ற வளரும் நாடுகளில் ஜிடிபி சரிவு 0.2 சதவீதமாக இருக்கலாம்.

கொரோனா வைரசால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் சுமார் 29 கோடி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது.

தற்போதைய கல்வி இடையூறுகள் உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் கல்வி உரிமைக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. இதுவரை 104 நாடுகளில் கொரோனா பரவியிருக்கும் நிலையில், எஞ்சிய 105 நாடுகள் பாதிப்பின்றி தப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...