Main Menu

பட்டதாரிகள் அவசரப்பட வேண்டாம் – ஒரு மாதம் வீட்டிலிருந்து கொண்டே சம்பளத்தை எடுங்கள் – பிரதமர் மஹிந்த

நாம் தேர்தல்களை ஒருபோதும் பிற்போட மாட்டோம். பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள், விசேட ஆசிரியர்கள், கேலிச் சித்திர ஓவியர்கள், ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

பட்டதாரிகள் செய்ய வேண்டியது, நியமனங்களை பொறுப்பேற்று பிரதேச செயலகங்களுக்குச் சென்று கையொப்பமிடுவதுதான். தங்களுக்குரிய நியமனக் கடிதங்கள் கிடைக்கவில்லையாயின் (Appeal) மீள் மனு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகளை தடுக்கும் ஓர் எதிர்க்கட்சித் தலைவரை நாம் இதுவரை பார்த்ததில்லை. செலுத்தப்படாத நிலுவை பணத்தை செலுத்த கணக்கு வாக்கெடுப்பொன்று கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கினால் வழங்க வேண்டாமென்கிறார் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் பல்வேறுவிதமான கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கு பிரதமர் பதிலளித்தார்.

கேள்வி : கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில ஒழுக்க நெறிகளை காண முடிந்தது. என்றாலும் அனைவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்கின்றனரே?

பதில் : வேட்பாளர்களுக்கு இடையேதான் விமர்சனம் செய்து கொள்கின்றனர். இத்தேர்தல் முறையின் கீழ் விருப்புவாக்கு யுத்தமொன்றே நடைபெறவுள்ளது. ஐ.தே.கவினர் எம்மை விமர்சிப்பதில்லை. எமக்குள் உள்ளவர்களே ஏனையவர்களை விமர்சிக்கின்றனர். என்னை விமர்சித்தால் மறுபக்கம் திரும்பிக்கொள்வதே எனது பழக்கம். ஏதாவதொன்றை கூறியவுடன் அதற்கு பதிலளிக்க செல்கின்றனர்.

கேள்வி : ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவான பின்னர் ஒழுக்கமான சில விடயங்களை காண முடிந்தது. என்றாலும் தற்போதும் மீண்டும் அந்த பழைய 225 பேரையே காண முடிகிறது?

பதில் : ஒருவரை ஒருவரை விமர்சித்துக்கொள்ளாது தொகுதியை வெற்றிகொள்ளுமாறே நாம் கூறியுள்ளோம். வேட்புமனுக்களை கொடுக்கும்போது மீண்டும் வேட்பாளர்களுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்படும்.

கேள்வி : பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளதே?

பதில் : தேர்தல்கள் ஆணைக்குழு இவர்களுக்கான நியமனத்தை இடைநிறுத்தியுள்ள போதிலும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு இம்மாதம் முதல் சம்பளம் வழங்கப்படும். ஆனால், அவர்களுக்கு பயிற்சி இல்லாது போகும்.

கேள்வி : பட்டதாரிகள் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்லும் வாய்ப்புள்ளது தானே?

பதில் : நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சென்று எதற்கு பணத்தை செலவழிக்க வேண்டும்? இரண்டு மாதம் வீட்டிலிருந்துக் கொண்டு சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு பின்னர் வேலைக்குச் செல்வது பொறுத்தமாக அமையும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வருவதை கூறுகிறார். வீட்டுக்குள் உள்ள பிரச்சினையை அவரால் தீர்க்க முடியாதுள்ளது.

கேள்வி : அண்மையில் பாரிய அளவில் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன. போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு முப்படையினர் பயன்படுத்தப்படுவார்களா?

பதில் : தற்போதைய சூழலில் அந்தப்பணி நடைபெற்று வருகிறது. கடற்படையினரும் பொலிஸாரும் நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதை தடுக்கவே முற்படுகின்றனர். பல மாதங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டே பொலிஸார் இப்போதைப் பொருளை கைப்பற்றினர். மூன்று பேர் சிறையிலிருந்துக்கொண்டு இந்தக் கடத்தலை வழிநடத்தியுள்ளனர்.

கேள்வி : தேர்தல் முறையை இன்னமும் எம்மால் மாற்ற முடியாது போயுள்ளது. அதேபோன்று பெண் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் சிக்கல்கள் உள்ளன.

பதில் : நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு வேட்புமனுக்களை கொடுப்போம். மக்கள் தான் தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.

கேள்வி : வரிச் சுமை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையவில்லையென்ற குற்றச்சாட்டுள்ளதே?

பதில் : மொத்த விற்பனையாளர்களுடன் அண்மையில் நான் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். வற் வரிதான் குறைக்கப்பட்டுள்ளது. வற் வரி அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படுவதில்லை. உருளைக்கிழங்கு, வெங்காயம், கடலை என எத்வொரு அத்தியாவசிய பொருட்களுக்கும் வற் வரி விதிக்கப்படுவதில்லை. நாம் அரசாங்கத்தை கையளிக்கும் போதே டொலரின் பெறுமதி 131 ரூபாவாகும். இன்று 183 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதனால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

கொரொனா வைரஸ் காரணமாக பொருட்கள் பரிமாற்றத்தில் சிக்கல் நிலைகள் ஏற்பட்டுள்ளன. முன்பு நாம் இவ்வாறு வரி குறைப்பை செய்தபோது பொருட்களின் விலைகளும் குறைவடைந்தன.

கேள்வி : அர்ஜுன் மகேந்திரனை கூடிய விரைவில் நாட்டுக்கு கொண்டுவருவோமென கூறியிருந்தீர்களே?

பதில் : சட்டரீதியாக அதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி : இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்ட தடைத் தொடர்பில் தற்போதைய நிலை என்ன?

பதில் : நாம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம்.

கேள்வி : விகாரைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் விகாரைகளுக்கு செல்ல வேண்டாமென்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளாரே?

பதில் : விகாரைகளுக்குச் செல்ல வேண்டாமென கூறவில்லை. விகாரைகளில் அரசியல் செய்ய வேண்டாமென்றே கூறியுள்ளார். விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாமென எவருக்கும் கூற முடியாது.

கேள்வி : உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுமென பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்துள்ளனரே?

பதில் : இது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கர்தினால் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆணைக்குழுவின் விசாரணையாளர்கள் தொடர்பில் எமக்கு பூரண நம்பிக்கையுள்ளது.

கேள்வி : ஜெனிவா யோசனைக்கு வழங்கிய இணை அனுசரணை வாபஸ் பெறப்பட்டதால் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்படுவோமென கூறப்படுகிறதே?

பதில் : அவ்வாறு நடைபெறாது. எமக்கு இதுவரை எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரை சந்தித்த போது சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எமது நாட்டில் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. எமக்கு இரண்டு விசாரணை அறிக்கைகள் உள்ளன. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் செயற்படுவோம்.

கேள்வி : எம்.சி.சி. உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் நாட்டுக்கு பாதகம் ஏற்படுமா?

பதில் : தற்போதைய சூழலில் கையெழுத்திடப்படாதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. சில திருத்தங்களை மேற்கொண்டால் பிரச்சினைகள் இல்லை.

கேள்வி : மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதே?

பதில் : நாம் தேர்தல்களை ஒருபோதும் பிற்போட மாட்டோம். பாராளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கைகளை எடுப்போம்.

கேள்வி : மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கேட்பதன் நோக்கம் என்ன?

பதில் : நாம் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவோம். அதற்கு முதலாவதாக 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும். ஐ.தே.கவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியே 19ஆவது திருத்தச் சட்டம்.

கேள்வி : உங்களது காலத்தில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், மக்கள் மனங்களை ஏன் வெல்ல முடியாது போனது?

பதில் : வைராக்கியத்தை ஏற்படுத்தியமையே அதற்கு காரணம். லம்போகினி பற்றி பேசினர். என்றாலும் நான் தேர்தலில் தோல்வியுற்று வீடு சென்ற போது இரண்டு கி.மீ. வரை மக்கள் வரிசையில் நின்றனர். யுத்தத்தை வெற்றிகொண்டதால் என்றால் சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றி ிகொண்டிருக்க வேண்டும் என்றார்.

பகிரவும்...