Main Menu

குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம்- இம்மாத இறுதியில் கன்னியாகுமரி வருகிறார்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் இம்முறையும் பாரதிய ஜனதா – காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடி போட்டி நடக்கிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்வது இன்று மாலையுடன் முடிகிறது. மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் அனைவரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் எம்.பி.யாக இருந்தார். கொரோனா பாதிப்புக்கு ஆளான வசந்த குமார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார்.

இதனால் காலியான கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் இம்முறையும் பாரதிய ஜனதா – காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடி போட்டி நடக்கிறது.

கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த பாரதிய ஜனதா கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் இம்முறையும் களம் இறங்கி உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இதனால் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குள் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் நாகர்கோவில், குளச்சல் மற்றும் விளவங்கோடு ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.

இதனால் குமரி மாவட்டத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சியினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா, குமரி மாவட்டம் வந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

அடுத்து பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். இம்மாத இறுதியில் அவர் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே வருகிற 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 30-ந் தேதி பிரசாரத்திற்கு வரலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொண்டு உள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் அதே நாளில்தான் கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கும் பாரதிய ஜனதா கட்சி 3-வது அணியாக களம் இறங்கி உள்ளது. தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, இங்கு பிரசாரத்தை முடித்து கொண்டு கேரளாவிலும் பிரசாரம் செய்வார் எனக்கூறப்படுகிறது. பிரதமர் வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இப்போதே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

பகிரவும்...