Main Menu

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 25 சட்ட விரோத வியாபார நிலையங்கள்

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக அமைந்துள்ள வியாபார நிலைய கட்டடங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. 

அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சுமார் 25 வியாபார நிலைய கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கரைச்சி பிரதேச சபையிடம் ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக கோரப்பட்ட தகவல்களுக்கு  கிடைக்கப்பெற்ற பதில்களிலேயே இந்த சட்ட விரோத வியாபார நிலையங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் அமைக்கப்படுவதாயின் பிரதேச சபையின் கட்டட அனுமதி பெறப்படல் வேண்டும். இது சட்டம். ஆனால், பேருந்து நிலையத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த 25 வியாபார நிலைய கட்டடங்களுக்கும் கட்டட அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் கரைச்சி பிரதேச சபையிடம் பெறப்படவில்லை; அத்தோடு, வியாபார நிலையங்களுக்குரிய பயனாளிகள் தெரிவு தங்களால் மேற்கொள்ளப்படவில்லை; தங்களிடம் பெயர் பட்டியல்கள் இல்லை எனவும் கரைச்சி பிரதேச சபை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு பதில் அளித்துள்ளது.

பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட நகர பகுதியில் சபையினரின் எவ்வித அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ள இந்த சட்ட விரோத வியாபார நிலையங்கள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...