Main Menu

அரச வளங்களை விற்பனை செய்தல் பற்றிய வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் மீண்டும் திருத்துவோம் – விஜித ஹேரத்

அரச வளங்களை விற்பனைசெய்தல் பற்றிய வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் மீண்டும் திருத்துவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் வியாழக்கிழமை (14) காலை சர்வதேச நாணய நிதியம் மற்றும் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் என்றவகையில் நானும் முதித்த நாணயக்காரவும், பொருளாதாரப் பேரவையின் அங்கத்தவர்களான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார மற்றும் சுனில் ஹந்துன்னெத்தியும் பங்கேற்றோம். நாணய நிதியத்தின் பீற்றர் புறூவரும் மூன்று பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலின் அடிப்படை சாரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக  இந்த செய்தியாளர் சந்திப்பினை நடாத்துகிறோம்.

அரசாங்கம் நாணய நிதியத்திடம் சென்றமையின் பிரதான நோக்கம் உள்நாடு மற்றும் வெளிநாட்டுரீதியாக  இந்நாட்டினால் பெறப்பட்டுள்ள கடன்களை மறுசீரமைத்துக் கொள்வதாகும். இது பற்றி வெளிப்படுத்தி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நீண்டகாலம் கழிந்துள்ளது. எனினும் வெளிநாட்டுக்கடன் இன்னமும் மறுசீரமைக்கப்படவில்லை. எமது பிரதிநிதிகள் இதுபற்றி ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளிடம் வினவினோம். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான காலவரையறை யாது? அதன் முன்னேற்றம் எப்படிப்பட்டது? என்பதை நாங்கள் கேட்டோம்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவுசெய்ய கழிகின்ற திட்டவட்டமான காலமொன்றைக் கூறமுடியாதென அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் எதிர்பார்த்த மறுசீரமைப்பு இன்னமும் இடம்பெறவில்லையெனவும் அவர்கள் தெளிவாகவே கூறினார்கள். கடனை மீளச்செலுத்துவதற்கான சலுகைக்காலமொன்றை பெற்றுக்கொள்ளல், கடன் வட்டிவீததத்தைக் குறைத்துக்கொள்ளல், ஏதேனும் கடன் அளவினை முழுமையாக வெட்டிவிடுதல் போன்ற வழிமுறைகளை எதிர்பார்த்தாலும் அத்தகையதொன்று இடம்பெறவில்லை என்பதை அவர்கள் தெளிவாகவே கூறினார்கள்.

எமது நாட்டில் ஊழல், மோசடிகளை நிறுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் நாங்கள் விசாரித்தோம்.  ஊழல், மோசடிகளை நிறுத்துதல் பற்றி அரசாங்கம் உடன்படிக்கைகளை செய்திருந்தபோதிலும் நடைமுறையில் சாதகமான எதையுமே செய்யவில்லை. அதுமாத்திரமன்றி பாரதூரமான முன்மாதிரிகளை  வழங்கி கோப் குழுவில் தோழர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றிய முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும்  தற்போது மற்றுமொரு திருடனை அதன் தவிசாளர் பதவிக்கு நியமித்துள்ளார்கள்.   கோப் குழுவின் தவிசாளர் பதவி எதிர்க்கட்சிக்கே வழங்கவேண்மென நிலவிய மரபினையும் மீறியே  ரணில் விக்கிரமசிங்க உலகிற்கு இந்த முன்னுதாரணத்தைக் கொடுத்துள்ளார். ஐ.எம்.எஃப். உடன் அரசாங்கம் என்னதான் உடன்படிக்கைகளை செய்துகொண்டாலும் நடைமுறையில் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதென்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையொன்றுக்காக ஜனாதிபதி கடந்த தினமொன்றில் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இந்த பேச்சவார்த்தைக்காக ஐ.எம்.எஃப். பிரதிநிதிகள் வருகைதராமை பற்றி நாங்கள் வினவினோம். அரசாங்கம் அத்தகைய கலந்துரையாடலுக்காக தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை அவர்கள் தெளிவாகவே கூறினார்கள். எனினும் ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவே ஜனாதிபதி மக்களுக்கு கூறினார். 

எனினும் முழு நாட்டடினதும் மக்களை ஊடகங்களினூடாக ஏமாற்றுகின்ற வேலையை அரசாங்கம் செய்திருந்தது. ஐ.எம்.எஃப். உடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தி, வரிகளை அதிகரித்து, நாட்டின் வளங்களை விற்றுக்கொண்டிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இவ்விதமாக பாரிய வஞ்சனையில் ஈடுபட்டு  ஐ.எம்.எஃப். பிரதிநிதின் இல்லாமல் அரசாங்கப் பிரதிநிதிகள் மாத்திரம் பங்கேற்ற கூட்டமொன்றுக்கு எதிர்க்கட்சியை அழைத்திருந்தார். 

நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கையை   சமர்ப்பியாமை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வினவி இருந்தார். அந்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஐ.எம்.எஃப்.  பிரதிநிதிகள் எம்மிடம் கூறினார்கள். அரசாங்கம் எதையுமே மறைப்பதில்லையென பிரச்சாரம் செய்தாலும் இந்த முக்கியமான அறிக்கைகள் எவற்றையும் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்ல என தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்தவேளையில் ஐ.எம்.எஃப். உடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் பற்றி அன்று ரணில் விக்கிரமசிங்கவும் கேள்விக்குட்படுத்தினார். அந்’த இரகசிய அறிக்கைகள் எவற்றையும் சமர்ப்பிக்க முடியாதென அன்று பசில் ராஜபக்ஷ கூறினார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே நடந்து கொள்கிறார்.

இலங்கையின் பொருளாதாரம் சிதைவடைந்தது மாத்திரமன்றி அரசாட்சி முறையில் பாரதூரமான பலவீனங்கள் நிலவுகின்றதென்பதை  நாங்கள் ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தோம். நிலவுகின்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திடாமல்  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாதெனவும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மக்கள்மீது சுமையேற்றப்படுதல் மற்றும் அரச வளங்களை விற்பனை செய்தல்  தொடர்பான வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் திருத்தியமைப்பமென நாங்கள் அறிவித்தோம். அதனை மையப்படுத்தியே நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.  இந்த அடிப்படை நிலைப்பாட்டில் இருந்துகொண்டே கடன் மறுசீரமைப்பு பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

பகிரவும்...