Main Menu

கிம் மீள்வருகையினை வரவேற்ற ட்ரம்ப்

இருபது நாட்கள் தலைமறைவாகி இருந்து மக்கள் மத்தியில் தோன்றியுள்ள வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்’னை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.

வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் கடந்த ஏப்ரல் 12ம் திகதிக்கு பின்னர் மக்கள் மத்தியில் தோன்றியிருக்காத நிலையில், அவரது மறைவு குறித்து பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டிருந்தன.

‘உன்’ கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இறந்துவிட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் வட கொரிய அரசு ஊடகம் ஒன்றின் வாயிலாக மக்களை சந்தித்தார்.

வட கொரியாவின் உற்பத்தி நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் நாடா வெட்டி குறித்த தொழிற்சாலையினை திறந்து வைத்தமையினை குறித்த ஊடகம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜொங் உன்’னின் மீள் வருகையினை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை அந்நாடு ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் எப்போதும் போல பின்னடைவிலேயே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 3 தடவைகள் கிம் ஜோங் உன்னை சந்தித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கிம் மீண்டு வந்தமை மற்றும் அவர் நலமாக உள்ளமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க புலனாய்வு துறைக்கு மிக நெருங்கிய வட்டாரங்கள் தகவல்கள், கிம் உயிருடன் உள்ளமையினை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையானவையா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளன.

பகிரவும்...