Main Menu

கர்நாடகாவில் ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது – ராகுல் காந்தி

கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததன் மூலம் ஜனநாயகமும், நேர்மையும் தோல்வி அடைந்துள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாளம் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ராகுல் காந்தி ருவிற்றரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-ஜனதாதளம் கூட்டணியை, தங்கள் அதிகாரத்துக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் சிலர் கருதினர்.

கூட்டணிக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் அவர்கள் இந்த ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே தங்கள் சுயநலனுக்காக அதை கவிழ்க்க முயன்று வந்தனர்.

அவர்களின் பேராசை தற்போது நிறைவேறி இருக்கிறது. ஆனால் ஜனநாயகமும், நேர்மையும் தோற்றுப்போய் இருக்கிறது. அத்துடன் கர்நாடக மக்களும் தோல்வியடைந்து உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், அங்கு ஆட்சிசெய்த காங்கிரஸ், ஜனதாளம் கூட்டணி ஆட்சி ஸ்திரமற்ற நிலையை எதிர்நோக்கியது.

இதனையடுத்து கர்நாடகாவில் முதலமைச்சராக செயற்பட்டு வந்த குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

குறித்த வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன.

இதன் மூலம் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதுடன், அங்கு புதிய அரசை அமைக்க பா.ஜனதா முயன்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...