Main Menu

ஐ.நா.வின் விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா

டீஸ்டா செதல்வாட் மற்றும் இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காவலில் வைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம், அவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம்.

2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்த அவர்களின் செயல்பாடு மற்றும் ஒற்றுமைக்காக அவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

உரிமைச் செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் மேலும் இருவரைக் கைது செய்ததற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விமர்சனத்தை முழுமையாக நிராகரிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

அத்துடன் அரசியலமைப்பில் உள்ள நிறுவப்பட்ட நீதித்துறை செயல்முறைகளுக்கு ஏற்பவே அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது, டீஸ்டா செதல்வாட் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளான ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோரின் கைது குறித்து கவலை தெரிவித்ததோடு, அவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, குறிப்பிடுகையில், ‘டீஸ்டா செதல்வாட், உள்ளிட்ட ஏனைய இரண்டு நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் கருத்தை நாங்கள் பார்த்தோம்.

இந்த கருத்துகள் முற்றிலும் தேவையற்றவையாகும். இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும் என அவர் கூறினார்.

‘இந்தியாவில் உள்ள அதிகாரிகள், நிறுவப்பட்ட நீதித்துறை செயல்முறைகளின்படி கண்டிப்பாக சட்ட மீறல்களுக்கு எதிராக செயல்படுவர்கள் மீது இத்தகைய சட்ட நடவடிக்கைகளை செயற்பாட்டிற்கான துன்புறுத்தல் என்று முத்திரை குத்துவது தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றும் அவர் மேலும் கூறினார்.

பகிரவும்...