Main Menu

ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் நாட்டில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரெக் பகுதியில் வசித்து வந்தவர்கள் தமிழ் வம்சாவளியை சேர்ந்த மோகன் (28), அய்யனார் (35). இவர்கள் வசித்த பகுதியில் இந்தியா-மியான்மர் நாட்டு எல்லை உள்ளது. இங்கிருந்து மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சென்று சிலர் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் மோகன், அய்யனார் இருவரும் குடியேறினர். அங்கு மோகன் ஆட்டோ டிரைவராகவும், அய்யனார் கடை வைத்தும் வேலை பார்த்தனர். இந்த நிலையில் இந்தியா-மியான்மர் எல்லையில் மோகன், அய்யனார் இருவரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரின் நெற்றியிலும் குண்டு பாய்ந்து இருந்தது. அவர்களது உடல்கள் இந்தியா-மியான்மர் எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தமு என்ற பகுதியில் கிடந்தது.

2 தமிழ் இளைஞர்களை மியான்மரை சேர்ந்த பயங்கரவாத குழு சுட்டுக் கொன்றதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மியான்மர் நாட்டில் செயல்படும் ‘பியூ ஷா தீ’ என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மோகன், அய்யனார் ஆகிய 2 பேரையும் சுட்டுக் கொன்று உள்ளனர். அவர்கள் உடல்கள் மியான்மரில் உள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் எல்லை பகுதிக்குள் ஏன் நுழைந்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறோம் என்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட மோகனுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மணிப்பூர் மாநில முதல்-மந்திரி நோங்தோம்பம் பிரென் கூறும்போது, மியான்மர் ராணுவத்தின் பின்னணியில் உள்ள பயங்கரவாத குழு சுட்டுக் கொன்று இருக்கலாம் என்று தெரிவித்தார்.

பகிரவும்...