Main Menu

ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..?: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு இன்று திங்கட்கிழமை கூடுகிறது. இந்த பாராளுமன்ற  குழுக்  கூட்டத்தின் போது  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமாக  ஆராயப்படவுள்ளது. 

இதன்போது எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து விசேட தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , 

கடந்த ஐந்தாம் திகதி ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை  உத்தியோகபூர்வமாக அறிவிக்கவே  தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் கூட்டணி தொடர்பில் ஆராய்வதற்கு கட்சியின் செயற்குழு  கூடியிருந்தது. ஆயினும் யாப்பில் காணப்படும் குறைப்பாடுகளின் காரணமாக திருத்தங்களுடன்  கூட்டணிக்கான யாப்பை கொண்டுவர வேண்டும் என்று கட்சியின்  அனேகமான உறுப்பினர்கள்  வலியுறுத்தியிருந்தார்கள்.

அதன் பின்னர் கட்சி தலைவர்களிடையே விசேட கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. அதற்கமைய தற்போது ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை திருத்தி அமைப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் அனேகமான உறுப்பினர்கள் தமது இணக்கத்தையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில இன்று திங்கட்கிழமை முற்பகல் கூடவுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தில்  பல முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. பாராளுமன்றம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும்  கலந்துரையாடப்படும். எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதே அனேகமானவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

எனவே பாராளுமன்ற குழுவில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களுக்கு அமைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றார்.  

பகிரவும்...