Main Menu

ஏக்கிய ராஜ்ஜிய-சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொள்கின்றனர்

புதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. செனட் சபை என்றும் மேல் சபை என்றும் புதிய கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒற்றுமைமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

அரசியலமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல்லை சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொண்டிருக்கின்றனர். ஏக்கிய என்பது ஒருமித்த நாடு என்று அர்த்தமாகும். அதில் எந்த பிளவும் இல்லை. அதனால் புதிய அரசியலமைப்பினூடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடவேண்டும்.

அத்துடன் புதிய அரசியலமைப்பினூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும்.

அதேபோன்று தேர்தல் முறைமையில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்ற முறையில் அடுத்த வரவு செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியாத நிலை பல தவிசாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கும் தற்போது பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்தவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...