Main Menu

எம்மை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 19ஆவது திருத்தச் சட்டம்

அரசியலில் இருந்து தனது குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “19ஆவது திருத்தச்சட்டத்தை தற்போது பலரும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தில் உள்ளவர்கள்கூட இதற்கான எதிர்ப்புக்களை தற்போது வெளியிடுகின்றனர்.

நாம் இதனை கொண்டுவரும்போதே எதிர்ப்புத் தெரிவித்தோம். 19ஆவது திருத்தச்சட்டம் என்பது முற்றுமுழுதாக எம்மை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட ஒன்றாகத்தான் நாம் கருதுகிறோம்.

இதில், ஒரு ஜனாதிபதி இரண்டு தவனைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, நான் மீண்டும் ஜனாதிபதியாக களமிறங்க முடியாத வகையில்தான் இந்த சரத்து ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பின்னர், வெளிநாடுகளில் குடியுரிமை உள்ளோர் ஜனாதிபதியாக களமிறங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இது பசில் ராஜபக்ஷவையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் இலக்கு வைத்து சேர்த்துக்கொள்ளப்பட்ட சரத்தாகும்.

பின்னர், நாமல் ராஜபக்ஷ களமிறங்கிவிடுவார் என்ற நோக்கத்தில், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 32 வயது இருக்க வேண்டும் என்ற எல்லையை 35 வயதாக மாற்றியமைத்தார்கள்.

இதிலிருந்து, எமது குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்காகவே இந்த திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தெளிவாக விளங்குகிறது.

அத்தோடு, இதன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரத்தையும் குறைத்து, அவரை சாதாரண ஒரு நபராக காண்பித்துள்ளார்கள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த சூழ்ச்சிக்கு அனைவரும் ஏமாந்துவிட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்கூட, இதனை உயர்வாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆனால். இதுவரை தமிழர்களுக்கு என்று அவர் உள்ளிட்ட தரப்பினர் எதனையும் மேற்கொள்ளவில்லை. இதுதான் இன்று நாட்டில் நடந்துள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...